தமிழகத்தில் மதவாத கட்சி உள்ளே வர காரணமாக இருந்தவர் ஓ.பி.எஸ்!

247 0

தமிழகத்தில் மதவாத கட்சி உள்ளே வர காரணமாக இருந்தவர் ஓ. பன்னீர்செல்வம். அந்த துரோகத்தால் தான் அவரை கட்சி பதவியில் இருந்து நீக்க வேண்டியிருந்தது என்று டி.டி.வி.தினகரன் பேசியுள்ளார்.

கொங்குநாடு வேட்டுவக் கவுண்டர் இளைஞர் நசலச்சங்கத்தின் 3-வது மாநில மாநாடு மற்றும் புதிய கட்சி தொடக்க விழா ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடந்தது. மாநாட்டுக்கு சங்க மாநில பொதுச் செயலாளர் கே.எஸ்.ராஜ்கவுண்டர் தலைமை தாங்கினார். மாநாட்டில் புதிய திராவிட கழகம் என்கிற புதிய கட்சி தொடங்கப்பட்டது.

மாநாட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.-

புதிய திராவிட கழகம் என்கிற பெயரில் கட்சி தொடங்கி இருப்பதே , வருங்கால தமிழகம் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை குறிக்கிறது. பெரியார் பிறந்த மண்ணில் இந்த கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

கொங்கு மண்டலம் எப்போதும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கோட்டையாக இருந்து வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக பதவியில் அமர்த்தியவர் சசிகலா தான்.

தமிழகத்தில் மதவாத கட்சி உள்ளே வர அவர் காரணமாக இருந்தவர் பன்னீர்செல்வம். அந்த துரோகத்தால் தான் அவரை கட்சி பதவியில் இருந்து நீக்க வேண்டியிருந்தது.

கடந்த 15-ந் தேதி கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் முடிவு வந்ததும், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து கடிதம் எழுதினார். அதில் தென்னிந்தியாவில் பா.ஜ.க. மலர கதவுகள் திறக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இதில் இருந்தே அவர் துரோகத்தை ஒப்பு கொண்டு உள்ளார்.

அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் வரும் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும், பகல் கனவு காண்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நான் சொல்லுவது, வரும் சட்டமன்ற தேர்தலில் நாங்கள் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.

காரணம் மக்கள், குறிப்பாக தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இன்று கூட நான் எடப்பாடிக்கு சென்ற போது அங்குள்ள பொதுமக்கள், பெரியவர்கள் தமிழகத்தில் இன்று நடக்கும் துரோக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்றனர். இந்த மாநாடு நடத்த பல்வேறு தடைகள் வந்தது. அதை தாண்டி தான் நடந்து வருகிறது.

அதன் பின்னர் தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.-

கர்நாடகாவில் பெரும் பான்மையை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதுபோல் எங்களது கட்சியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும். அப்போது மக்களாட்சி அமையும்.

கமல்ஹாசன் மாற்றத்தை கொண்டு வருவேன் என்கிறார். அவரால் எப்படி மாற்றம் கொண்டு வர முடியும். மக்கள் தானே மாற்றத்தை கொண்டு வர முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment