உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: விவசாய சங்கத்தினருடன் வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை

314 0

விளை நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாய சங்கத்தினருடன் வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

விவசாய நிலங்களின் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், எனவே இவ்வாறான மின் திட்டங்களுக்கு மாற்றாக சாலையோரமாக கேபிள் பதித்து மின் வயர்களை கொண்டு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் முன்னூர் கிராமம், தென்னிலை கீழ்பாகம், க.பரமத்தி ஆகிய இடங்களில் சில விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதற்கு கரூர் மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, சாலையோரமாக கேபிள் வயர்களை பதித்து மின்திட்டத்தை செயல்படுத்துமாறும், இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் அந்த சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், மாநில தலைவர் கொங்கு ராஜாமணி, மாவட்ட செயலாளர் முத்துவிஸ்வநாதன் மற்றும் ஈசன், ஆடிட்டர் நல்லுசாமி, செந்தில் உள்பட நிர்வாகிகள், விவசாயிகளுடன், நேற்று அமைதி பேச்சுவார்த்தைக்கான கூட்டம் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி தலைமை தாங்கினார். அப்போது உயர் மின் கோபுரம் அமைக்கும் போது அதன் திட்டப்பாதை விவசாய நிலத்தின் உள்ளே செல்வதால் மரம் வளர்த்தல் உள்ளிட்டவை தடைபடுகிறது. மேலும் நீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளையும் விதிக்கின்றனர்.

அந்த மின்பாதையில் ஏற்படும் மின் தூண்டலினால் பயிர் பாதிக்கப்படுவதோடு, விவசாய நிலத்தையொட்டி வளர்க்கப்படும் கால்நடைகளும் பாதிப்படையக்கூடும். எனவே கரூரில் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என விவசாயிகள் கூறினர். அப்போது இது பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் பதில் கூறினார். இதில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் மாநில தலைவர் கொங்கு ராஜாமணி நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

உயர் மின்கோபுர திட்டத்தினால் விவசாய நிலங்கள் பாழ்படுவதை தவிர்ப்பதற்கான ஒரே வழி கேபிள் மூலம் புதை வழித்தடத்தில் மின்வயர்களை கொண்டு செல்வது தான். எனவே இதை தான் கரூரில் நடைமுறைப்படுத்த கூட்டத்தில் வலியுறுத்தினோம். இந்த பிரச்சினை திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இருக்கிறது. ஆனால் இந்த உயர் மின்கோபுர திட்டபாதையால் பாதிப்பு இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். இதனை பொது மேடையிலோ அல்லது முக்கியஸ்தர்களின் முன்னிலையிலோ யாராவது வாதம் செய்து விஞ்ஞானபூர்வமாக நிரூபித்தால் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கூட்டியக்கம் சார்பில் ரூ.1 கோடி பரிசு தந்து விடுகிறோம். மேலும் விவாத மேடையிலேயே ரூ.1 கோடியை காசோலையாகவோ, வங்கி வரைவோலையாகவோ (டிடி) வைத்து விட்டு நாங்கள் பாதிப்புகளை முன்வைக்கிறோம். அந்த சமயத்தில் அதிகாரிகள் பாதிப்புகள் இல்லை என நிரூபிக்க தவறினால், ஏற்கனவே போடப்பட்டுள்ள உயர் மின்கோபுரங்களை கழற்றி கேபிள் மூலம் மாற்று முறையில் அதனை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment