புதிய ஆட்சி அமைந்தவுடன் கர்நாடக முதல்வரை சந்திப்போம் – கமல்ஹாசன்

218 0

காவிரி பிரச்னையில் நாம் உரிமைகளை இழந்து வருவதாக கூறிய கமல்ஹாசன், கர்நாடகாவில் புதிய ஆட்சி அமைந்தவுடன் கர்நாடக முதல்வரை சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார்.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் ஆஜராகி, வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது வரைவு செயல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தபின் அரசிதழில் வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.
மேலும் ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியமா? குழுவா? அல்லது முகமையா? என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும் என மத்திய அரசு விளக்கம் கேட்டது. இதையடுத்து மாநிலங்களுடன் வரைவு செயல் திட்டத்தை பகிர்ந்து கருத்துக்களை கேட்டறிய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டதுடன் வழக்கை வருகிற புதன்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன், விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கமல்ஹாசன் பேசியதாவது,
காவிரி விவகாரத்தில் மே 19-ஆம் தேதி சென்னையில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். காவிரி பிரச்னையில் நாம் உரிமைகளை இழந்து வருகிறோம். இது மக்கள் பிரச்சனை என்பதால் கட்சிகளை தாண்டி நாம் ஒன்றாக நிற்கவேண்டும். தமிழக விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஒற்றுமை மிகமிக அவசியம். காவிரி பிரச்னையில் நம்முடைய ஒற்றுமையை நாம் காட்டியே ஆக வேண்டும்.
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் புதிய ஆட்சி அமைந்தவுடன், முதலமைச்சரை சந்திக்க தயாராக உள்ளோம் என்று கமல்ஹாசன் கூறினார்.

Leave a comment