நதிகளைப் பாதுகாப்பதற்கு முறையான வேலைத்திட்டமொன்று அவசியம் – ஜனாதிபதி

427 0

கரையோரங்கள் அரிக்கப்படுவதனால் நாட்டின் நதிக்கட்டமைப்புக்கள் பாரிய சவால்களை எதிர்நோக்கியிருப்பதுடன் அவற்றை பாதுகாப்பதற்கு முறையான வேலைத்திட்டமொன்றிணை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் எற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவினருடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் மையப் பகுதிகளிலிருந்து 103 நதிகள் கடலை நோக்கி பாய்ந்தோடி செல்வதுடன், மகாவலி கங்கையே அவற்றுள் பெரிய நதியாக காணப்படுகின்றது. ஆயினும் நதிகளை பாதுகாப்பதற்கு உரிய வேலைத்திட்டமொன்று காணப்படாமை மற்றும் அது தொடர்பாக செயற்படுவதற்கு பொறுப்புக்கூறக்கூடிய நிறுவனமொன்று காணப்படாமை போன்ற காரணங்களால் மகாவலி கங்கை உள்ளிட்ட ஏனைய நதிகள் பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த சகல தரப்பினரும் உடனடி கவனம் செலுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

உலக வங்கியானது நீண்டகாலமாக இலங்கையின் அபிவிருத்திக்கு வழங்கிவரும் ஒத்துழைப்பினை இதன்போது பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பொறுப்பு வாய்ந்த பங்காளராக எதிர்காலத்திலும் அவ் ஒத்துழைப்புகளை குறைவின்றி எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

பூகோள வெப்பமடைதல் காரணமாக ஏற்பட்டுள்ள வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களினால் ஏனைய உலக நாடுகளைப் போன்றே இலங்கையும் எதிர்நோக்க நேர்ந்துள்ள சவால்களை இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி;, வரட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு என்பன இலங்கைக்கு புதிய அனுபவங்களாக இல்லாதபோதிலும் கடந்த சில வருடங்களைப் போன்று பாரிய அழுத்தங்களுக்கு இதற்கு முன் முகங்கொடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

இந் நிலைமைகளின்போது மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக உலக வங்கியின் அன்பளிப்பினால் செயற்படுத்தப்பட்ட செயற்திட்டங்களின் பங்களிப்பிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

உலக வங்கியின் நன்கொடையில் செயற்படுத்தப்படும் கரையோரப் பாதுகாப்பு செயற்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாகவும் இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, எதிர்வரும் சில வருடங்களுக்குள் நீர் முகாமைத்துவ துறையில் செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கும் புதிய மாற்றங்களுக்கும் உலக வங்கியின் உதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் மின்சக்தி துறையின் வளர்ச்சி தொடர்பாக அரசாங்கம் விசேட கவனத்துடன் செயற்பட்டு வருவதுடன், புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் தொடர்பில் முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எத்தகைய முதலீடுகள் நாட்டிற்கு கிடைக்கின்ற போதிலும் இலங்கை அரசாங்கமானது, விவசாயத்துறையினை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தையே தொடர்ச்சியாக நம்பியிருப்பதாக ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

Leave a comment