இறப்பர் உற்பத்தி பாதுகாக்கப்பட வேண்டும்!

255 0

சர்வதேச இறப்பர் மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பமானது.பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் வழிகாட்டல் மற்றும் அமைச்சரின் தலைமையில் சர்வதேச இறப்பர் ஆய்வுக்குழுவின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2018 இறப்பர் மாநாடு தடைகளை முறியடித்து நிலையான அபிவிருத்தியை நோக்கி என்ற தலைப்பில் இம்முறை முதல் முறையாக இலங்கையில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திஸாநாயக்க இலங்கையில் இறப்பர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்கள் மற்றும் பெருந்தோட்ட உரிமையாளர்கள் இந்த உற்பத்தித் துறையில் தமது உற்பத்தி நடவடிக்கையில் தொடர்ந்து தங்கியிருக்க முடியுமா என்பது தொடர்பில் இறப்பர் ஆய்வு மாநாடு பொருத்தமான தீர்வை முன்வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இறப்பர் துறை ஆய்வாளர்களின் மதிப்பீடுகளுக்கு அமைவாக 2025 ஆம் ஆண்டில் 17 மில்லியன் மெற்றிக்தொன் இயற்கை இறப்பர் தேவைப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு இதற்கான தீர்வை உலக இறப்பர் ஆராய்ச்சி மாநாடு காணும் என்று எதிர்பார்க்கின்றோம். உதாரணமாக சிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்கள் தாம் மேற்கொள்ளும் இறப்பர் உற்பத்தி மூலமான வருமானத்தை பெறுவதற்கு 7 முதல் 10 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

இவர்களுக்கு சொந்தமாக இருப்பதும் வருமானத்திற்குமாக இருப்பதும் இந்த சிறு காணியே ஆகும்.இதேபோன்று பாரிய முதலீட்டாளர்கள் இது குறித்து இரு முறை சிந்திக்க முடியும். இலங்கையை பொறுத்தவரை காணிகள் மிக முக்கியமானதாகும்.

காணிகள் மூலம் குறுகிய காலத்தில் பயன்களை பெறக்கூடிய உற்பத்திகளை பெறக்கூடிய சந்தர்ப்பம் உண்டு; இங்கு மாத்திரமல்ல உலக நாடுகளில் இது யதார்த்தமாகும். எனவே நிலையான அபிவிருத்தியை நோக்கிய இறப்பர் துறையின் வளர்ச்சிக்கு இறப்பர் விலை தொடர்பில் நிலவும் ஏற்றதாழ்விற்கு தீர்வை காண்பதற்கு இந்த மாநாடு பெரிதும் உதவும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

பெருந்தோட்டத்துறை அமைச்சின் தலைமையில் ஆரம்பமான இந்த மாநாட்டில் 36 அங்கத்து நாடுகள் கலந்துகொண்டுள்ளன. இறப்பர் தொழிற்றுறையுடன் தொடர்புபட்ட இறப்பர் உற்பத்தி நாடுகள் விற்பனையாளர்கள் விநியோகஸ்தவர்கள் இரசாயன துறையைச்சார்ந்தோர் தயாரிப்பாளர்கள் தனியார் துறையினர் அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை பிதிநித்துவப்படுத்தி பலர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

தெற்காசியாவில் முக்கிய கேந்திர நிலையமாக இலங்கை வளர்சியடைந்துவருவதினால் இந்த மாநாடு இலங்கையில் நடைபெறுவது மாத்திரமின்றி உலகின் இறப்பர் துறையில் இறப்பர் கேந்திர நிலையமாக இலங்கை எதிர்காலத்தில் திகழும் என்பதினால் இந்த மகாநாடு சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது

Leave a comment