22 ஆண்டுகளுக்கு பிறகு திருமண நிகழ்ச்சி நடந்த கிராமம்

350 0

ராஜஸ்தான் மாநிலத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் 22 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் டோல்பூர் மாவட்டத்தில் ராஜ்காட் என்ற குக்கிராமம் உள்ளது. சம்பல் ஆற்றங்கரையில் உள்ள இக்கிராமத்தில் 350 பேர் மட்டுமே வகிக்கின்றனர்.

இங்கு ரோடு வசதி இல்லை. மின்சாரம் கிடையாது. குடிநீர் குழாய்கள் மற்றும் மருத்துவ வசதி என மக்களின் அன்றாட அத்தியாவசிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.

ஒரு அரசு தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. அதில் ஒருசில மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். சூரியன் மறைந்து விட்டால் கிராமம் முழுவதும் இருட்டாகி விடும். சுத்தமான குடிநீருக்கு ஆற்றை கடந்து செல்ல முடியாத, சூழ்நிலையில் கிடைக்கும் சுத்தமில்லாத தண்ணீரை குடித்து மக்கள் உயிர் வாழ்கின்றனர்.

இத்தகைய அடிப்படை வசதி எதுவும் இல்லாத இக்கிராமத்தில் வாழும் இளைஞர்களுக்கு கடந்த 22 ஆண்டுகளாக திருமணமே நடைபெறவில்லை.

ஏனெனில், குடிநீர், மின்சாரம் மற்றும் ரோடு வசதி என எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாத கிராமத்துக்கு தங்களது மகளை திருமணம் செய்து தர அண்டை நகரம் மற்றும் கிராமத்து பெற்றோர் விரும்பவில்லை.

டோல்பூர் கிராமத்தை சேர்ந்த வாலிபர் அஸ்வனி பராசர் என்பவர் ஜெய்ப்பூர் சவாய்மேன் சிங் அரசு மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு ‘எம்.பி.பி.எஸ்’ பட்டப்படிப்பு படிக்கிறார்.

அவர் தனது கிராமத்தின் அவலநிலை குறித்தும், கிராமத்து இளைஞர்கள் திருமணமாகாமல் வருடக்கணக்கில் தவித்து வருவது குறித்தும் வெளி உலகத்தினருக்கு இமெயில், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.

தனது டோல்பூர் கிராமத்துக்கு ராஜஸ்தான் அரசு ரோடு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதியை செய்து தரக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பிரதமர் அலுவலகத்துக்கும் கடிதம் எழுதினார்.

இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு ராஜ்காட் கிராமத்தில் ஒரு வாலிபருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அவரது பெயர் பவன்குமார்.

23 வயதான இவருக்கு அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்தில் இருந்து மணப்பெண் கிடைத்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு ராஜ்காட் கிராமத்தில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. கிராம மக்கள் அனைவரும் ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் திருமண விழாவை கொண்டாடினார்கள்.

Leave a comment