அமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு விவகாரம் – டிரம்புக்கு சம்மன்

261 0

அமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி டிரம்புக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து, குடியரசு கட்சி வேட்பாளராக களம் இறங்கிய டொனால்டு டிரம்பை வெற்றி பெறச்செய்வதற்கு ரஷியா நேரடியாக தலையிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார். ரஷியாவும் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற குழு ஒரு விசாரணை நடத்துகிறது.

அதே நேரத்தில் ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்பு குழுவின் விசாரணையும் நடத்தப்படுகிறது.

இந்த குழு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இதை டிரம்பின் முன்னாள் வக்கீல் ஜான் தாவ்த் உறுதி செய்து உள்ளார்.

இந்த விசாரணை தொடர்பாக முல்லர் குழுவினருக்கும், டிரம்ப் வக்கீல்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து உள்ளது.

டிரம்பிடம் விசாரணையின்போது கேட்பதற்காக கேள்விகள் பட்டியலும் தயாரிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பதவியில் அமர்ந்து கொண்டு, டிரம்ப் பிரமாண வாக்குமூலம் அளித்து, விசாரணை குழுவினரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய தர்ம சங்கடமான சூழல் உருவாகி உள்ளது.

Leave a comment