செம்மொழி விருதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக விமர்சிக்க கூடாது’, என்றும், ‘கருணாநிதியே தமிழ் விருதை பெற்றது தெரியாமல் மு.க.ஸ்டாலின் பேசிவருகிறார்’, என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
‘செம்மொழி விருதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக விமர்சிக்க கூடாது’, என்றும், ‘கருணாநிதியே தமிழ் விருதை பெற்றது தெரியாமல் மு.க.ஸ்டாலின் பேசிவருகிறார்’, என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
செம்மொழி விருதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது போல் செய்திகள் வெளியானது. இதையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை தொடர்பு கொண்டபோது, ‘தமிழ் நிச்சயம் புறக்கணிக்கப்படவில்லை. பல ஆண்டுகளாகத் தமிழ் விருதுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. புதிதாக சேர்க்கப்பட்ட மொழிகளை பற்றியே அறிவிப்பு கொடுக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள தமிழ் விருதுகள் நீக்கப்படவில்லை, தவறாக புரிந்துகொண்டு விமர்சிக்க வேண்டாம்’, என்று தெளிவான விளக்கம் கிடைத்தது.
ஆனால் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழை மத்திய அரசு புறக்கணிப்பது போலவும், வேண்டுமென்றே தமிழ் வெறுப்புணர்வு பா.ஜ.க.விடம் ஊறியிருக்கிறது என்ற விஷ கருத்துகளை கூறியிருக்கிறார்.
நேற்று (நேற்று முன்தினம்) கூட ‘மனதோடு பேசுகிறேன்’ என்ற வானொலி உரையில் பிரதமர் நரேந்திர மோடி, பண்டையத் தமிழர்கள் தண்ணீர் சேமிப்பை கல்வெட்டுக்களில் பதிந்து இருக்கிறார்கள்’, என்ற வரலாற்றை பேசியது உங்கள் காதுகளில் விழவில்லையா? விழாது. ஏனெனில் மோடி எதிர்ப்பு எனும் வெறுப்பு உங்கள் காதுகளை அடைத்திருக்கும்போது மோடியின் அழகு தமிழ் பெருமை கூற்று காதில் விழாது.
தி.மு.க.-காங்கிரஸ் ஆட்சி செய்தபோது ரெயில் பயண சீட்டில் தமிழை நீக்கியது ஏன்? அதை மீண்டும் கொண்டு வந்தது பிரதமர் மோடி அரசு தானே… மோடி எதிர்ப்பு எனும் கருப்பு கண்ணாடியை நீங்கள் அணிந்து இருப்பதால், இவையெல்லாம் உங்கள் கண்களில் படாது.
‘தமிழக பா.ஜ.க. தமிழுக் காக நடிக்கிறார்கள்’, என்று கூறுகிறீர்களே… தமிழ் உணர்விலும், உயர்விலும் அதிகம் பங்கெடுத்தது நீங்களா? நாங்களா? என்பதை விவாதிக்க தயாரா? தி.மு.க.-காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்த இலங்கை தமிழர் படுகொலையே நீங்கள் தமிழர்களை புறக்கணித்ததற்கு சாட்சி. அரசியலுக்காக, பதவிக்காக கடந்த காலத்தில் காவிரி உரிமையை காவு கொடுத்த நீங்கள் இன்று தமிழ் உணர்வு பற்றி பேசுவது வேடிக்கை.
டெல்லியில் ராகுல் காந்தி மக்களின் கோபம் என்று பேசினாரே… அதில் ஏன் காவிரி பிரச்சினையை பற்றி பேசவில்லை என்று கேட்டீர்களா? காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவிடாமல் எதிர்க்கும் கர்நாடக காங்கிரஸ் கட்சியை கேள்வி கேட்கும் தெம்பும், திராணியும் உங்களுக்கு இருக்கிறதா?
இந்த தமிழ் விருது மத்திய அரசால் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது, அதற்கு சிறந்த உதாரணம் கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதியே இந்த விருதை பெற்றுள்ளார். ஆக தன் தந்தை வாங்கிய விருதை கூட தெரியாமல் இன்று மு.க.ஸ்டாலின் பா.ஜ.க. மீதுள்ள வெறுப்பு அரசியலை செய்து வருவதை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

