பேராசிரியர் முருகன்- கருப்பசாமி மீண்டும் சிறையில் அடைப்பு

218 0

பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோரை வருகிற 14-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். 

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. இவர் அந்த கல்லூரியில் படித்த 4 மாணவிகளை பாலியலுக்கு அழைத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டார். அப்போது மதுரை பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரின் தூண்டுதலின் பேரிலேயே மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக கூறினார்.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார், பேராசிரியர் முருகனை பொறி வைத்துப்பிடித்தனர். கருப்பசாமி மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தார். இருவரையும் தங்கள் காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 5 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மதுரை காமராஜர் பல்கலைக் கழக மனிதவள மேம்பாட்டுத் துறை இயக்குநர் கலைச் செல்வன், துணை இயக்குநர் விஜயதுரை, கிருஷ்ணன் கோவிலைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் தங்கப் பாண்டியன் மற்றும் தேவாங்கர் கல்லூரி பேராசிரியர்கள், நிர்வாகிகள் ஆகியோரும் வரவழைக்கப்பட்டு இதுவரை 84 பேரிடம் விசாரணை நடந்துள்ளது.

கருப்பசாமியிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. கருப்பசாமியின் செல்போனை அவரது உறவினர்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு நடத்தி வருகிறார்கள்.காவல் இன்றுடன் முடிவடைந்ததைத்தொடர்ந்து பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை இன்று சாத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்துச் சென்றனர்.

அங்கு மாஜிஸ்திரேட்டு விடுமுறையில் இருந்ததால் இருவரையும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஜே.எம்.2 நீதிபதி பரமசிவம் வீட்டில் ஆஜர்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோரை வருகிற 14-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக கவர்னரால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி சந்தானம் 2-ம் கட்ட விசாரணையை நடத்தி வருகிறார்.

முருகன், கருப்பசாமியிடமும் அவர் விசாரணை நடத்த உள்ளனர். மதுரை சிறையில் ஓரிரு நாளில் பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோரிடம், சந்தானம் நேரில் சென்று விசாரணை நடத்துகிறார். பின்னர் தனது அறிக்கையை கவர்னரிடம் தாக்கல் செய்கிறார்.

Leave a comment