தமிழக முதலமைச்சர் இன்று ஆளுநரை சந்திக்கிறார் – காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க வாய்ப்பு

214 0

தமிழக முதல்வர் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேச உள்ளார். அப்போது காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது. 

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த தவறிய மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.  இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

ஆனால், வரைவு செயல் திட்டத்தை உருவாக்க அளிக்கப்பட்ட கால அவகாசம் போதவில்லை என்றும், மேலும் 2 வாரம் அவகாசம் தேவை என்று மத்திய அரசு புதிய மனுவை தாக்கல் செய்தது. இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிப்பு தெரிவிக்கப்பட்டது.  இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டும் விசாரணைக்கு ஏற்றிருந்த நிலையில், திடீரென மத்திய அரசு வாபஸ் பெற்றது. இதையடுத்து வரைவு செயல் திட்டம் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சுப்ரீம் கோர்ட்டில் வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது காவிரி விவகாரம் தொடர்பாக ஆளுநருடன் அவர் ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்யும் வரைவு செயல் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த செயல் திட்டத்தில் உள்ள அம்சங்களைப் பொறுத்து, தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

Leave a comment