வடபகுதி மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் தொழிலாளர் தினமாக இம்முறை மே தினத்தை அனுட்டிக்க மக்கள் விடுதலை முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தக் கட்சியின் வட மாகாண அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி ஆகியவற்றை வலியுறுத்தியே சர்வதேச தொழிலாளர் தினத்தை யாழ்ப்பாணத்தில் அனுட்டிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி மே முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளமை தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராமலிங்கம் சந்திரசேகரன் இந்தத் தகவல்களை முன்வைத்திருக்கின்றார்.
எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் ஜே.வி.பி யினர் இணைந்து, தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுவந்த புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் பணிகளை முடக்க சதித்திட்டம் தீட்டியுள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளரான அரசியல் கைதிகளை விடுவித்துக்கொள்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் குற்றம்சாட்டியுள்ளார்.
அதேவேளை ஜே.வி.பி யினர் தமிழ் மக்களை மாத்திரமன்றி சிங்கள பௌத்த மக்களையும் ஏமாற்றிவருவதாகவும் குற்றம்சாட்டிய அரசியல் கைதிகளை விடுவித்துக்கொள்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் தெரிவித்துள்ளார்.

