காவிரி விவகாரம் – தமிழகத்துக்கு நீதி கிடைக்க ஐ.நா. சபை தலையிட வேண்டும்: வைகோ கடிதம்

231 0

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்துக்கு நீதி கிடைக்க ஐ.நா. சபை தலையிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். 

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ காவிரி பிரச்சினை தொடர்பாக ஐ.நா. மன்றத்துக்கு அனுப்பி இருக்கும் கடிதத்தில் கூறி இருப்பதாவது:

தமிழகத்தின் 19 மாவட்டங்களுக்கும், தலைநகர் சென்னைக்கும் குடி தண்ணீர் வழங்கும் காவிரி நதிநீர் உரிமையை, பல்லாயிரம் ஆண்டுகளாக அனுபவித்து வருகின்ற உரிமையை, கர்நாடக அரசு தடுக்கின்ற அநீதிக்கு இந்தியாவின் மத்திய அரசு துணைபோவதால், மனித உரிமைகள் ஆணையத்தில் செயல்படும் நீங்கள், இதில் தலையிட்டு, இந்திய அரசுக்கு அறிவுறுத்துவதற்காக, இந்தக் கோரிக்கை மடலைச் சமர்ப்பிக்கிறேன்.

இந்தியாவின் தென் கோடியில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் இயங்கி வருகின்ற காவிரி பாதுகாப்பு இயக்கம், காவிரி பாசன விவசாயிகளின் உரிமைகளைக் காக்கவும், தமிழகத்தின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்வதற்காகவும் பாடுபட்டு வருகின்றது. அதற்காகப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றது.

2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் நாள், இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைச் செயல்படுத்துவதற்குப் புதிதாக ஒரு திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே வேளையில், தமிழகத்திற்கு நடுவர் மன்றம் வழங்கி இருந்த காவிரி நீரில் மேலும்14.75 டி.எம்.சி. நீரைக் குறைத்து விட்டது.

தமிழகத்தின் தலைநகர் சென்னை உட்பட, 19 மாவட்டங்களுக்குக் காவிரி நீர்தான் குடிநீர் ஆகும். தமிழகத்தின் இரண்டரைக் கோடி மக்கள், உயிர் வாழக் காவிரிக் குடிநீரையை நம்பி உள்ளனர்.

இந்த நிலையில், மேலும் அதிர்ச்சி அளிக்கின்ற வகையில், கர்நாடக அரசு, மேகே தாட்டூ, ராசி மணல் ஆகிய இரண்டு இடங்களில் காவிரியின் குறுக்கே புதிய அணைகளைக் கட்டத் திட்டமிட்டு, அதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்து வருகின்றது.

அப்படி இந்த அணைகளைக் கட்டி விட்டால், அதன்பிறகு, கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குக் காவிரி நீர் வராது. 25 இலட்சம் ஏக்கர் பாசனப் பரப்பு பாழாகும்.

தமிழகத்தின் பசுமையான காவிரி தீரப் பகுதிகள் காய்ந்து பாலை மணல்வெளி ஆகும். அதனால் ஏற்படக்கூடிய பேரபாயத்தை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகின்றது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு விட்டால், அதன்பிறகு, கர்நாடக அரசு புதிய அணைகளைக் கட்டமுடியாது. தமிழகத்தின் வாழ் வாதாரங்கள் பாதுகாக்கப்படும், நீதி நிலைநாட்டப்படும்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், இந்திய அரசு, கபட நாடகம் ஆடுகின்றது; இரட்டை வேடம் போடுகின்றது; தமிழ்நாட்டை வஞ்சிக்கின்றது.

எனவே, தாங்கள் இப்பிரச்சினையில் தலையிட்டு, இந்திய அரசைத் தொடர்பு கொண்டு, காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு நீதி கிடைக்கவும், குடிநீர் வழங்கவும் தமிழகத்தின் பாசனப் பரப்பைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இயன்ற நடவடிக்கை எடுப்பதாக லியோஹெல்லர் உறுதி அளித்துள்ளார்.

Leave a comment