ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது தினகரன் முதல்வராக முயற்சி செய்தார் என்று திவாகரன் புதிய குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
சசிகலா உறவினர்களான டி.டி.வி. தினகரனுக்கும், திவாகரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் பரபரப்பு புகார்களை கூறி வருகிறார்கள்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு எதிராக தினகரன் செயல்பட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு வருவதாக திவாகரன் பாராட்டினார்.
இந்த நிலையில் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது தினகரன் முதல்வராக முயற்சி செய்தார் என்று திவாகரன் புதிய குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இதுபற்றி திவாகரன் அளித்த பேட்டி வருமாறு:-
தினகரனுக்கும் எனக்கும் இடையேயான பிரச்சனைக்கு காரணம் வெற்றிவேல் தான். தினகரன் மனைவி எழுதிக் கொடுத்த அறிக்கைகள் தான் வெற்றிவேல் மூலம் வெளியாகிறது. இது தினகரனுக்கே தெரியாது. அவரது மனைவி தான் இப்போது கட்சியை நடத்துகிறார். தினகரன் வெறும் பொம்மைதான்.
தனது கணவர் முதல்- அமைச்சராகி விடுவார் என்று சொல்லி இருக்கின்றனர். அதற்கு ஒரே போட்டி நான் தான் என்று நினைத்து என்னை வேறுக்கப்பார்க்கிறார்கள்.
10 வருடம் தலைமறைவாக இருந்து ஜெயலலிதா இறந்த பிறகுதான் தினகரன் வெளியிலேயே வந்தார். வந்தவுடன் முதல்வராக வேண்டும் என்று நினைத்தார். இதற்கு மக்கள் ஒத்துக்கொள்வார்களா? அல்லது எம்.எல்.ஏ.க்கள் தான் ஒத்துக் கொள்வார்களா? இந்த சமயத்தில் தான் நான் சரியாக செயல்பட்டேன். அக்கா சசிகலா அழுது கொண்டு இருக்கிறார். அம்மாவின் உயிர் போய் விட்டது. டிக்ளர் பண்ணச் சொல்லி கவர்னரிடம் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டது.
பல ஜாதி, பல ஏரியா என முதல்வர் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் ஒன்று சேர்ந்து காரியத்தை வீணாக்கி விடுவார்கள். அப்போது ஓ.பி.எஸ்.சை முதல்வராக்கினால் தான் பிரச்சனை இல்லாமல் போகும் என்று சசிகலாவிடம் சொன்னேன்.

இதனால் முதல்வராக ஆசைப்பட்ட தினகரனின் முதல் முயற்சி தகர்க்கப்பட்டது. இந்த கோபம் தான் அம்மாவை முதல்வராக இல்லாமல் முன்னாள் முதல்வராக புதைக்கப்பட நான் காராணம் என்று இப்போது சொல்ல வைத்திருக்கிறது. அந்த இடத்தில் நல்ல மனிதன் செய்ய வேண்டிய வேலையை நான் செய்தேன்.
இறுதிச்சடங்கு முடிந்த பின்னர் சசிகலாவை பார்த்து, உனக்கு சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரப்போகிறது. இந்த நேரத்தில் உன்னை முதல்வராகும்படி யாராவது சொன்னால் உனக்கு குழிபறிக்கிறார்கள் என்று அர்த்தம். அதை ஏற்றுக் கொள்ளாதே என்று தெளிவாக சொல்லிவிட்டு நான் வந்துவிட்டேன்.
நான் எதற்கு பயந்தேனோ அது நடந்துவிட்டது. அனைவரையும் சமாதானம் செய்து அழகாக அரசை நடத்திக் கொண்டிருந்த ஓ.பி.எஸ்.சுக்கு தினகரனும் அவரது மைத்துனர் வெங்கடேசும் அங்கேயே போய் தங்கி ஏகப்பட்ட குடைச்சல் கொடுக்க தொடங்கி விட்டனர்.
சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வந்து சசிகலா சிறைக்கு செல்லும் போது தினகரன் அவரிடம் சென்று ‘என்னை முதல்-அமைச்சராக்கி விட்டு செல்லுங்கள்’ என்று சொன்னார். ஜெயிலுக்கு செல்லும்போது யாராவது இப்படி கேட்பார்களா? அருகே இருந்த செங்கோட்டையன், தளவாய் சுந்தரமெல்லாம் இதற்கு சாட்சி. நான் அப்போது அங்கே இல்லை. நான் இருக்கும் போது கேட்டிருந்தால் அறைந்திருப்பேன்.
‘முதல்வர் பதவி இல்லையென்றால் துணை பொதுச்செயலாளர் பதவியாவது கொடு’ என்று கட்டாயத்தின் பேரில் அந்த பதவி கொடுக்கப்படுகிறது. சசிகலா சொன்னார்கள் என்று பல கதைகளை தினகரன் அரங்கேற்றி வருகிறார்.
சசிகலா எடுப்பார் கைப்பிள்ளைப்போல் யார் அருகே வந்து எதை சொன்னாலும் நம்பிவிடுவார். எடப்பாடி பழனிசாமியை பற்றி தப்பு தப்பாக சொன்னதையும் நம்பிவிட்டார். என்னை பற்றியும் தப்பாக சொல்லி இருக்கின்றனர். அவரை அப்படி மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறார் தினகரன்.
ஓ.பி.எஸ்.ஸோ, எடப்பாடி பழனிசாமியோ சசிகலாவுக்கு துரோகம் செய்வார்கள் என்பதை நான் ஒத்துக் கொள்ளவில்லை. சில விஷயங்களில் சில எதிர் மறையான முடிவுகளை எடுக்கத்தான் செய்வார்கள். பெரிய பிரபலமானவர் இல்லை எடப்பாடி பழனிசாமி. ஆனால் இத்தனை குடைச்சல் கொடுத்தும் ஒரு வருடம் ஆட்சியை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் ஓட்டிவிட்டாரே. அவர் திறமையை மதியுங்கள். இதற்காகவெல்லாம் நான் அவருடன் இணைந்துவிடுவேன் என்பது சரியல்ல. நான் உண்மையை பேசுகிறேன். தினகரன் என்னையும் மதிப்பதில்லை. எனது ஆட்களையும் மதிப்பதில்லை. என்னை துரோகி என்று முத்திரை குத்தப்பார்க்கிறார்கள். அதற்கு நான் இடம் தரமாட்டேன். எனக்கு ஆதி அந்தம் அனைத்தும் தெரியும். பல்லை பிடிங்கிவிடுவேன்.
தினகரனுக்காக தியாகம் செய்த 18 எம்.எல்.ஏ.க்கள் இப்போது செய்தது தவறு என்று வருத்தப்படுகிறார்கள்.
யாரையும் வாழ விடமாட்டார்கள் போலிருக்கிறது. அடுத்து தங்க தமிழ்ச்செல்வன், புகழேந்தியைக் கூட அனுப்பி விடுவார்கள் போலிருக்கிறது. அதற்கான நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. தினகரனைப் பொறுத்தவரை இந்த கட்சியானது தான், தன் மனைவி, மைத்துனர் ஆகியோர் சேர்ந்து தீர்மானித்த கட்சியாக இருக்க வேண்டும். நாளைக்கு யாரும் இதற்கு சொந்தம் கொண்டாடக்கூடாது. நாங்களே ராஜா, நாங்களே மந்திரி என்று இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள்.
நாங்கள் எடப்பாடி பழனிசாமியிடமும் போக மாட்டோம். தி.மு.க. பக்கமும் போக மாட்டோம். எப்போதும் போல் பத்து பேரோ, நூறு பேரோ, லட்சம் பேரோ எங்களிடம் இருப்பவர்களுடன் ஏற்கனவே இருந்து வரும் ‘அம்மா அ.தி.மு.க.’ அணியில் அப்படியே போய்க் கொண்டிருப்போம். பின்னர் நல்ல சூழ்நிலைகள் அமையும். பிரிந்து கிடக்கின்ற எம்.ஜி.ஆர்., அம்மா சக்திகள் ஒன்று திரளும் நேரம் வரும். அதற்காக காத்திருக்கிறோம்.இவ்வாறு திவாகரன் கூறியிருக்கிறார்.

