ஷேக் ஹசினாவுக்கு சர்வதேச பெண் தலைமையாளர் விருது

218 0

பல லட்சக்கணக்கான ரோஹிங்கியா அகதிகளுக்கு அடைக்கலம் அளித்த வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு சிட்னி நகரில் வரும் 27-ம் தேதி சர்வதேச பெண் தலைமையாளர் விருது வழங்கப்படுகிறது.

மியான்மர் நாட்டில் சிறுபான்மை இனத்தவர்களான ரோஹிங்கியா இன முஸ்லிம்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய பின்னர் சுமார் 4 லட்சம் ரோஹிங்கியா மக்கள் அங்கிருந்து வெளியேறி அண்டைநாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.

அவர்களை இன்முகத்துடன் வரவேற்ற பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான வங்காளதேசம் அரசு தற்காலிக முகாம்களை அமைத்து பராமரித்து வருகிறது.

நாங்கள் சாப்பிடும் உணவில் பாதியை ரோஹிங்கியா அகதிகளுக்கு பகிர்ந்து கொடுப்போம் என அறிவித்திருந்த ஷேக் ஹசினா, அகதிகளாக இருக்கும் மியான்மர் மக்கள் மீண்டும் தங்களது வசிப்பிடத்துக்கு சென்றும் குடியேறும் புணர்வாழ்வுக்கான ஒப்பந்தத்தையும் மியான்மர் அரசுடன் ஏற்படுத்தி தந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த மகளிர் அமைப்பின் சார்பில் 2018-ம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் உச்சி மாநாடு ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஷேக் ஹசினா வரும் 26-ம் தேதி ஆஸ்திரேலியா செல்கிறார்.

வங்காளதேசம் நாட்டுப் பெண்கள் கல்வியிலும், தொழில் முனைவோராகவும் உயர்வதற்கு அரும்பணியாற்றிய ஷேக் ஹசினாவை வாழ்நாள் சேவையை கவுரவிக்கும் வகையில் வரும் 27-ம் தேதி நடைபெற்றும் சர்வதேச மகளிர் உச்சி மாநாட்டின்போது அவருக்கு சர்வதேச பெண் தலைமையாளர் விருது வழங்கப்படுகிறது.

Leave a comment