இடைநிலை ஆசிரியர்கள் 3-வது நாளாக போராட்டம்

255 0

சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் இன்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊதிய முரண்பாட்டை களையக்கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் டி.பி.ஐ. வளாகத்தை முற்றுகையிட்டு உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். தமிழகம் முழுவதும் இருந்து வந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களை கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைத்தனர். அங்கும் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று 2-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடங்கிய அவர்கள் மிகவும் சோர்வுற்ற நிலையில் காணப்பட்டனர். போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியைகள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்து விட்டு அவர்கள் தண்ணீர் மட்டும் குடித்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். நேற்று 29 பேர் மயக்கம் அடைந்ததால் அவர்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மற்றும் செயலாளருடன் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும், 10 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும், ஒருநபர் கமி‌ஷன் அமைத்து ஊதிய முரண்பாடுகளை களைவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அதனை போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை. ஊதிய முரண்பாட்டை களைய எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை என்பதால் உண்ணாவிரதத்தை கைவிடாமல் தொடர்ந்து இருந்து வருகின்றனர்.

ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரதம் இருந்து வந்த ஆசிரியர்களை அங்கிருந்து வெளியேற்ற போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அங்கு குடிநீர், மற்றும் கழிவறைக்கு செல்லக் கூடிய பைப் லைன்களை எல்லாம் துண்டித்து விட்டனர். போராட்டத்தில் அதிகம் பெண்கள் ஈடுபட்டதால் அவர்கள் கழிவறைக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

இதற்கிடையில் அங்கிருந்த ஆசிரியர்கள் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று இரவு மாற்றினர். போலீஸ் வேன்களில் அவர்களை அழைத்து சென்றனர்.

மாநகராட்சி பள்ளியில் நேற்றிரவு முதல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். உணவு எதுவும் சாப்பிடாமல் குடிநீர் மட்டுமே பருகுவதால் ஆசிரியர்- ஆசிரியைகள் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டனர்.

இன்று 3-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலையில் சோர்வற்ற நிலையில் காணப்பட்டனர்.

இன்று காலையில் சோர்வுற்ற நிலையில் காணப்பட்ட ஆசிரியைகள் மயங்கி விழுந்தனர். காலையில் 30 பேர் மயக்கம் அடைந்து தரையில் விழுந்ததால் அவர்களை உடனே ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுவரையில் 58 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டம் குறித்து நிர்வாகி ரெக்ஸ் கூறியதாவது:-

1.6.2009-க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கும், அதற்கு பிறகு பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்கும் ரூ.15 ஆயிரம் ஊதிய முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி அடிப்படை சம்பளத்தில் மட்டும் ரூ.3,170 வேறுபாடு உள்ளது. ஒரே தகுதி, ஒரே வேலையை செய்து வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என 9 வருடமாக போராடி வருகிறோம்.

இப்போது கூட போராட்டத்தை கைவிட வேண்டும் என்றுதான் கூறுகிறார்களே தவிர கோரிக்கையை தீர்க்க எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை. நிதி நிலையை ஆராய்ந்து சொல்வதாகவும் கூறுகின்றனர். இவையெல்லாம் ஏற்புடையதாக இல்லை என்பதால் போராட்டத்தை தொடர்கிறோம்.

இனிமேல் தண்ணீர் கூட குடிக்காமல் சாகும்வரை போராட்டத்தைதான் மேற்கொள்ள வேண்டும். அரசாணை பெறும்வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.

Leave a comment