பஸ்-கார்-ஆட்டோக்களில் பேனிக்பட்டன் கட்டாயம் விரைவில் அமல்படுத்த திட்டம்

2561 0

பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக பஸ்களில் அபாய கால எச்சரிக்கை கருவியான ‘பேனிக்பட்டன்’ விரைவில் பொருத்தப்பட உள்ளது.

வாகனங்களில் செல்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாகனத்திலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படுவதுடன் எச்சரிக்கை அலாரம் அடிக்கக்கூடிய ‘பேனிக்பட்டன்’ பொருத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனை ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக வட்டார போக்குவரத்து துறையும் காவல்துறையும் இணைந்து ‘கண்ட்ரோல் ரூம்‘ (கட்டுப்பாட்டு அறை) அமைத்து ஒவ்வொரு வாகனங்களின் நடவடிக்கையையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

ஜி.பி.எஸ். கருவியுடன் பேனிக்பட்டன் (அபாய பொத்தான்) பொருத்தப்பட்ட வாகனங்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க முடியும். வாகனங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு ஏதேனும் ஆபத்து நேரும் சூழ்நிலை ஏற்பட்டால் பேனிக் பட்டனை அழுத்தினால் கண்ட்ரோல் ரூம் எச்சரிக்கை அலாரம் ஒலிக்கும். வாகனத்திலும் எச்சரிக்கை ஒலி கேட்கும்.

இதை வைத்து வாகனம் எந்த திசையில், எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதை கண்டறிய முடியும். வண்டியின் பதிவு எண் உள்பட அனைத்து விவரமும் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துவிடும். இதன்மூலம் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும்.

இந்த கருவியை முதற் கட்டமாக பஸ்- கார்- ஆட்டோ, லாரிகளில் பொருத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதுபற்றி மாநகர போக்குவரத்து கழக அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக பஸ்களில் அபாய கால எச்சரிக்கை கருவியான ‘பேனிக்பட்டன்’ விரைவில் பொருத்தப்பட உள்ளது.

இந்த பட்டனை அழுத்தினால் அபாய சத்தத்துடன் அலாரம் அடிக்கும். இதன் மூலம் நாம் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும்.

ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு கண்ட்ரோல் ரூம் அமைத்தால்தான் இது முழு செயல்பாட்டுக்கு வரும். இதற்கான நடவடிக்கையில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்றார்.

வட்டார போக்குவரத்து கழக அதிகாரி கூறுகையில், வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவியுடன் ‘பேனிக்பட்டன்’ பொருத்துமாறு மத்திய அரசு அனைத்து வழிமுறைகளையும் வகுத்துள்ளது. இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.

இதன்மூலம் ஒரு வாகனம் எங்கிருந்து எவ்வளவு வேகத்தில் செல்கிறது, எங்கெங்கு நிற்கிறது போன்ற அனைத்து விவரங்களும் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிந்து விடும்.

இதன் மூலம் குற்றச்செயல்கள் நடைபெறுவது தடுக்கப்படும். ஆட்டோக்களில் ஆட்டோ மீட்டருடன் அபாய பொத்தானை பொருத்த உள்ளோம். பஸ்களில் பெண்கள் இருக்கை பகுதியில் இந்த பேனிக் பட்டனை பொருத்த முடிவெடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment