தலையில் கல்லடிப்பட்டும் ரத்தம் வழிய கடமையாற்றிய காஞ்சி எஸ்.பி!

352 0

செங்கல்பட்டு அருகே இளம்பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தில் சாலை மறியலை அகற்றச்சென்ற எஸ்.பி. கல்வீச்சில் மண்டை உடைந்தும் தனது பணியை விடாமல் செய்ததை மற்ற காவலர்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர்.

போராட்டம் நடக்கும்போது கல்வீச்சு போன்ற சம்பவங்களில் காவலர்கள் தாக்கப்படுவது சகஜமாக நடக்கும் நிகழ்வு, அதிகாரிகளும் கடுமையாக காயம்பட்ட சம்பவங்களும் நடந்தது உண்டு. ஆனால் காயம்பட்டு ரத்தம் வழிய அதை துணியால் அழுத்தி பிடித்துக்கொண்டு கடமையாற்றுவதற்கு அதிக நெஞ்சுரம் தேவை.

அப்படி ஒரு சம்பவம் நேற்று செங்கல்பட்டு , மகேந்திர சிட்டி அருகே நடந்தது. செங்கல்பட்டு அருகே மகேந்திர சிட்டியில் அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டதில் லாவண்யா என்ற இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உறவினர்களும், பொதுமக்களும் சாலையில் கிடந்த இளம் பெண்ணின் உடலை அகற்றவிடாமல் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை முடக்கப்பட்டு 5 கிலோ மீட்டர் தூரம் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக நின்றன.

செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் கோடை விடுமுறைக்காக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பலர் அவதியுற்றனர். செங்கல்பட்டு, பரனூர், மகேந்திரசிட்டி உள்பட 5 கிமீ தூரத்துக்கு கடும் நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி தலைமையில் வந்த போலீஸார், பொது மக்களை கலைந்து போக சொல்லி அறிவுறுத்தினர்.

ஆனால் விபத்து உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு கலைந்து செல்ல பொதுமக்கள் மறுத்தனர்.

இதனால் பல மணி நேரம் மறியல் நீடித்தது. பொதுமக்களை கலைந்துச்செல்ல போலீஸார் கூறியபோது விஷமிகள் சிலர் கல்வீச்சில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்தை சீராக்க மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைக்க முற்பட்டனர்.

அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் கையில் கிடைத்த கற்களை கொண்டு போலீசாரை தாக்கினர். இதில் பாதுகாப்புப் பணியில் இருந்த காஞ்சிபுரம் எஸ்.பி சந்தோஷ்குமார் ஹதிமானியின் மண்டை உடைந்தது.

தலையிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்ததை பார்த்து எஸ்.பியின் பாது காவலர்கள், சக அதிகாரிகள் பதறி போனார்கள்.

வாருங்கள் மருத்துவரிடம் போகலாம் என்று அழைத்தனர், ஆனால் அந்த இளம் ஐபிஎஸ் அதிகாரி அதை மறுத்த அவர் தலையில் ரத்தம் வழிவதை நிறுத்த கைக்குட்டையை வைத்து அழுத்தியபடி வாகன போக்குவரத்தை சீராக்கவும், இளம் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் பணியிலும் ஈடுபட்டார்.

எஸ்.பிக்கு எதாவது ஆகிவிட போகிறது என்று சுற்றி சுற்றி பதறியபடி நிற்பதும் அதை லட்சியம் செய்யாமல் வாகனத்தை வரவழைத்து இளம்பெண் பிரேதத்தை ஏற்றி போக்குவரத்தை சீராக்கும் முயற்சியில் ஈடுபட்டு வாகன போக்குவரத்து சீரான பின்னரே அங்கிருந்து கிளம்பிச்சென்றார்.

இதை பொதுமக்களில் யாரோ ஒருவர் செல்போனில் படம் பிடித்து வாட்ஸ் அப்பில் போட்டுவிட அது வைரலாகி வருகிறது.

எஸ்.பி.சந்தோஷ்குமார் ஹதிமானி ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்டவராக இருந்தாலும் தமிழ் மீது மாறா பற்றுக்கொண்டவர்.

இலக்கியத்தில் பட்டம் பெற்றவர் என நெருங்கியவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a comment