தேனியில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு மத்திய அரசு அளித்த அனுமதிக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
தேனி மாவட்டம் பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க கடந்த 2011-ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து சுமார் 2.5 கி.மீ பரப்புக்கு சுரங்கங்கள் அமைக்கும் பணிகளும் தொடங்கியது.
ஆனால் இந்த ஆய்வகத்தால் மேற்கு தொடர்ச்சி மலையின் பல்லுயிர் பெருக்க இடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அழியும் எனக்கூறி இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதற்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் சீர்கேடு அடையும் எனக்கூறி நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி மறுத்தது.
பின்னர் டாட்டா நிறுவனம் சார்பில் கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசிடம் புதிய மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதை ஆய்வு செய்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசிடம் எந்த ஆலோசனையும் கேட்காமல் டாட்டா நிறுவனம் ஆய்வக பணிகளை தொடர அனுமதி வழங்கியது.
இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தற்போது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு சுற்றுச்சூழல் துறை வழங்கிய அனுமதியை ரத்து செய்யவேண்டும் என்றும், பொது மக்களிடம் கருத்து கேட்ட பிறகுதான் ஆய்வகத்திற்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்ட விதிகளுக்கு புறம்பாக நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

