வடகொரியா அதிபரின் அறிவிப்புக்கு டிரம்ப் வரவேற்பு!

331 0

அணு ஆயுத சோதனை நிறுத்தப்படும் என்ற வடகொரியாவின் அறிவிப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரவேற்பு தெரிவித்து உள்ளார். 

அணு ஆயுத சோதனை மூலம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை மிரட்டிக்கொண்டு இருந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். முதற்கட்டமாக தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை  கடைபிடிக்க தொடங்கிய வடகொரியா, அமெரிக்காவுடன் நேரடியாக பேசுவதற்கும் ஆர்வம் காட்டியது.
இதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் தென்கொரியா தெரிவித்தது. உடனே அவரும் கிம் ஜாங் உன்னை சந்திக்க தயார் என கடந்த மாதம் அறிவித்தார். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வரும் மே அல்லது ஜூன் மாத துவக்கத்தில் இந்த சந்திப்பு நிகழக்கூடும் என தெரிகிறது.
இந்த நிலையில், அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணையை நிறுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளது.  ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் அணு ஆயுத சோதனை முற்றிலும் நிறுத்தப்படும் என அறிவித்துள்ள அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுத சோதனை தளத்தை மூடவும் உத்தரவிட்டுள்ளார்.
அணு ஆயுத சோதனை நிறுத்திவைக்கப்படும் என்ற வடகொரியாவின் அறிவிப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரவேற்பு தெரிவித்து உள்ளார். கிம் ஜாங் உன்னின் அறிவிப்பு வடகொரியாவுக்கு மட்டும் இல்லாது உலக வளர்ச்சிக்கு உதவும் என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

Leave a comment