அணு ஆயுதங்கள், ஏவுகணை சோதனைகள் இனி வடகொரியாவில் நடைபெறாது!

246 0

உலகை மிரட்டிவரும் வடகொரியாவில் இனி அணு ஆயுதங்கள், ஏவுகணை சோதனைகள் நடைபெறாது என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். 

ஐக்கிய நாடுகள் சபையின் தடையை தகர்த்து, அடுத்தடுத்து ஏவுகணை சோதனை, அணுகுண்டு பரிசோதனை என உலக நாடுகளை அதிர வைத்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தற்போது சில மாதங்களாக மனம்மாறி வெள்ளைக்கொடி காட்டி வருகிறார்.
சமீபத்தில் தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தனதுநாட்டு அணியை அனுப்பியது, தென்கொரியா அரசு பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது ஆகியவற்றின் மூலம் அனைவரின் புருவங்களை உயர வைத்தார்.
பேச்சுவார்த்தைக்கு வந்த தென்கொரிய பிரதிநிதிகளிடம் இப்போதைக்கு ஏவுகணை சோதனைகள் இருக்காது எனவும், அமெரிக்கா உடன் பேச தயாராக இருப்பதாகவும் கிம் தெரிவித்ததாக கூறப்பட்டது.
கிம் ஜாங் உன் உடனான பேச்சுவார்த்தைக்கு டொனால்டு டிரம்ப்பும் கிரீன் சிக்னல் கொடுத்துள்ள நிலையில் வரும் மே மாதத்தில் அமெரிக்கா – வடகொரியா இடையேயான பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடகொரியாவில் இனி அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடைபெறாது என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். மேலும் அங்கு செயல்பட்டு வரும் அணு ஆயுத சோதனை மையங்களை மூட அதிபர் உத்தவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் – தென்கொரியா அதிபர் மூன் ஜே ஆகியோர் விரைவில் சந்தித்து பேச உள்ள நிலையில், கிம் ஜாங் உன்னின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a comment