மட்டக்களப்பில்  அன்னை பூபதியின் 30 ஆவது ஆண்டு நினைவு தினம்(காணொளி)

645 0

தமிழ் மக்களின் உரிமைக்காக, 1988 ஆம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த, தியாக தீபம் அன்னை பூபதியின் 30 ஆவது ஆண்டு நினைவு தினம், இன்று மட்டக்களப்பு நாவலடியில் அனுஷ்டிக்கப்பட்டது.

அன்னை பூபதியின் உறவினர்களின் ஏற்பாட்டில், அன்னை பூபதியின் 30 ஆவது ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்வு, மட்டக்களப்பு கல்லடி நாவலடியில் அமைக்கப்பட்டுள்ள, அன்னை பூபதியின் சமாதியில் நடைபெற்றது.

அன்னை பூபதியின் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு, உறவினர்கள், பொது மக்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில், அரசியல் கட்சிகளுக்கும், பொது அமைப்புக்களும் கலந்துகொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் செய்யப்பட முறைப்பாட்டுக்கு அமைய, அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவனிடம், அன்னை பூபதியின் மகள் மற்றும் உறவினர்களால், அன்னையின் நினைவாலயம் அமைப்பது தொடர்பாக சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதன் போது, அன்னையின் உறவுகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர சபையால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்களின் கீழ், அன்னையின் சமாதி அமைந்துள்ள வளாக பகுதி புனரமைக்கப்பட்டு, நினைவாலயம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a comment