மீதொட்டமுல்ல – இழப்பீட்டுத்தொகை வழங்குவதற்கு நடவடிக்கை

259 0

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்த அனர்த்தத்தினால் காணிகளை இழந்தவர்கள் அது தொடர்பில் மேன்முறையீட்டை சமர்பித்து இழப்பீட்டை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இடர்முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இடர்முகாமைத்துவ அமைச்சில் இது தொடர்பாக இன்று நடை பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குப்பை மேடு சரிந்து விழுந்ததினால் சுமார் 40 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இவற்றில் சில வாகனங்கள் தொடர்பிலான ஆவணங்களைக்கூட சமர்ப்பிக்கமுடியாத நிலை உண்டு. இதன் காரணமாக பெரும்பாலானவர்களின் வாழ்க்கைக்கான தொழிலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோட்டார் வாகன ஆணையாளர் திணைக்களத்தின் விசேட குழுவின் மூலம் சம்பந்தப்பட்ட தகவல்களை துரிதமாக பெற்றுக்கொண்டு பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு நட்டஈட்டை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் குப்பைமேட்டில் ஏற்பட்ட சிறியளவிலான வெடிப்புக்கள் தொடர்பாக விரைவாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை தற்பொழுது அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வீடுகளை பெற்றுக்கொள்ளாது வீட்டுக்கான நிதியுதவியை பெற்றுக்கொள்வோருக்கு வீட்டுக்கடன் உதவியை வழங்கும்பணியை மே மாதம் வரையில் நீடிக்குமாறும் அமைச்சர் சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது இடர்முகாமைத்துவ பிரதி அமைச்சர், இடர்முகாமைத்துவ செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a comment