ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண கட்சியின் மூலம் தெரிவு செய்யப்பட்ட நகராதிபதிகள், நகர சபை தலைவர்கள், பிரதேச சபை தலைவர்கள் தங்களது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வுக்கு பொதுமக்களின் பணத்தை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தின் சில மாநகர, நகர, பிரதேச சபைகளின் தலைவர்கள் கடமைகளை பொறுப்பேற்கும் போது பொதுமக்களின் பாரிய தொகை பணத்தினை பயன்படுத்தியுள்ளதாக தனக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் இது மிகப்பெரும் குற்றமாகும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஏழை மக்களின் வரி அறவீடுகள் மூலம் முன்னெடுக்கப்படும் நகர, பிரதேச சபைகளின் நிதியங்கள் பொதுமக்களின் தேவைக்கு வழங்கப்பட வேண்டிய நிலையில் தற்போதைய அரசினால் முன்னெடுக்கப்படும் சில வைபவங்களுக்கு அந்த பணங்கள் பயன்படுத்தப்படுவதை தம்மால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த வைபவங்களுக்கு இவ்வாறு பணத்தை செலவிடுமாறு நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர சபை அதிகாரிகளுக்கு வலியுறுத்த முடியாது எனவும் மிகவும் இலகுவான முறையில் எளிமையாக குறித்த நிகழ்வுகளை நடத்துமாறு நகர, பிரதேச சபைகளிடம் வேண்டிக்கொள்வதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

