அமெரிக்க உளவுப்படை தலைவர் வடகொரியாவுக்கு ரகசிய பயணம்

268 0

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்புக்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக அமெரிக்க உளவுப்படை தலைவர் மைக் போம்பியோ வட கொரியாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டார்.

அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் வடகொரியா இதுவரை 6 முறை அணுகுண்டுகளை சோதித்து உள்ளது. அமெரிக்காவின் எந்தவொரு நகரையும் தாக்கும் வல்லமை வாய்ந்த ஏவுகணைகளையும் அந்த நாடு பரிசோதித்து உள்ளது.

இதனால் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடும் பகையும், வார்த்தை யுத்தமும் நிலவி வந்தது. வடகொரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. அதுமட்டுமின்றி, ஐ.நா. சபையும் பொருளாதார தடைகளை விதிக்க வைத்தது. ஒரு கட்டத்தில் இரு நாடுகள் இடையே போர் மூளும் நிலை கூட உருவானது.

ஆனால் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், வடகொரியாவின் நிலைப்பாட்டில் பல மாற்றங்களை உருவாக்கின. தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை வடகொரியா கடைப்பிடிக்க தொடங்கியது.

இரு நாட்டுத்தலைவர்களும் நேரடியாக சந்தித்து பேச உள்ளனர். அதுமட்டுமின்றி, வடகொரியாவுக்காக அமெரிக்காவிடம் தென்கொரியா பரிந்து பேசியது.

அதன் எதிரொலியாக, அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் விருப்பம் தெரிவித்தார். அதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் தென்கொரியா தெரிவித்தது. உடனே அவரும் கிம் ஜாங் அன்னை சந்திக்க தயார் என கடந்த மாதம் அறிவித்தார். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 18 ஆண்டுகளில் இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கப்போவது இதுவே முதல் முறை ஆகும்.

அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையேயான தலைவர்கள் மட்டத்தில் ஆன சந்திப்பு, கடைசியாக 2000-ம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க வெளியுறவு மந்திரி மெடிலைன் ஆல்பிரைட்டுக்கும், கிம் ஜாங் அன்னின் தந்தை கிம் ஜாங் இல்லுக்கும் இடையே நடந்து உள்ளது.

இந்த நிலையில் டிரம்ப், கிம் ஜாங் அன் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக அமெரிக்க உளவுப்படை சி.ஐ.ஏ.யின் தலைவர் மைக் போம்பியோ வடகொரியாவின் பியாங்யாங் நகருக்கு சமீபத்தில் ரகசிய பயணம் மேற்கொண்டு இருந்தார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்த தகவல்களை முதலில் ‘வாஷிங்டன் போஸ்ட்’ ஏடு வெளியிட்டு உள்ளது.

சில தினங்களுக்கு முன் அமெரிக்க வெளியுறவு மந்திரி பதவியில் இருந்து ரெக்ஸ் டில்லர்சனை நீக்கி விட்டு, அவரது இடத்தில் சி.ஐ.ஏ.யின் தலைவர் மைக் போம்பியோவை நியமிப்பதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். அதைத் தொடர்ந்துதான் மைக் போம்பியோ வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார்.

அவர் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். டிரம்புடனான சந்திப்புக்கு முன் ஏற்பாடுகளை செய்வதற்காக இந்த சந்திப்பு நடந்து உள்ளது.

இதை டிரம்ப் உறுதி செய்கிற விதத்தில் புளோரிடாவில் வைத்து கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் (அமெரிக்கா மற்றும் வடகொரியா) மிக உயர்ந்த மட்டத்தில் பேச்சு நடத்தி உள்ளோம்” என குறிப்பிட்டார்.

மைக் போம்பியோ வடகொரியாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டு கிம் ஜாங் அன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதை அமெரிக்க உயர் அதிகாரிகள் உறுதி செய்து உள்ளதாக ரெயிட்டர்ஸ் செய்தி நிறுவனமும் தெரிவித்து உள்ளது.

டிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பு அடுத்த மாத இறுதியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. பேச்சுவார்த்தைக்கான இடம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

அதே நேரத்தில் வடகொரியா-தென்கொரியா இடையே ராணுவ மயமற்ற ஒரு இடம், சீனத்தலைநகர் பீஜிங், வேறு ஒரு ஆசிய நாடு, ஐரோப்பிய நாடு அல்லது சர்வதேச கடல் பகுதியில் ஒரு கப்பலில் வைத்தும் பேச்சுவார்த்தை நடப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. #

Leave a comment