ஆசிஃபாவும் எனது மகளே; அவளுக்காகவும் போராடுவேன்! – ஹாசினி தந்தை

363 0

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபா தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறாள். பேக்கர்வால் முஸ்லிம் எனப்படும் நாடோடி சமூகத்தைச் சேர்ந்த அச்சிறுமி, கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி தன் குதிரைகளை மேய்க்கச் சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை.

எங்கு தேடியும் கிடைக்காத ஆசிஃபா ஒரு வாரம் கழித்து அதே பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருக்கிறாள். கோவிலுக்குள் அடைத்து வைத்து, மயக்க மருந்து கொடுத்து, தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறாள் ஆசிஃபா.

8 வயது சிறுமிக்கு நேர்ந்த இக்கொடுமை ஒருபுறம் இருக்க, மற்றொருபுறத்தில் இந்த வழக்கில் கைதானவர்களை காப்பாற்ற நடைபெறும் போராட்டங்களும், பேரணிகளும் நம் நாட்டின் நீதி அமைப்பையே கேலிக்குரியதாக்கும் கொடூரத்தின் உச்சமாக உள்ளன. இச்சம்பவம் தொடர்பாக கைதான 8 பேரில் மூன்று பேர் போலீஸ் அதிகாரிகள்.

ஆளும் பாஜக நிர்வாகிகளும் கைதானவர்களுள் அடக்கம். 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலைசெய்த வழக்கில் சரணடைந்துள்ள 60 வயது சஞ்சி ராம்-ஐ விடுவிக்கக்கோரி ‘இந்து ஏக்தா மஞ்ச்’ என்ற அமைப்பு ஊர்வலம் நடத்துகிறது. அதில் பாஜக பிரமுகர்களும் கலந்துகொள்கின்றனர்.

குழந்தைக்கு நேர்ந்த கொடுமை, குற்றவாளிகளை காப்பாற்ற நினைக்கும் எண்ணம் இவற்றை எப்படி புரிந்துகொள்ளுவது? இந்தியாவையே உலுக்கியுள்ள ஆசிஃபாவுக்கு நேர்ந்த கொடுமையை நினைக்கும் போது சில மாதங்களுக்கு முன்னதாக பலாத்கார படுகொலை செய்யப்பட்ட குழந்தை ஹாசினியின் முகம் கண்ணுக்கு முன்னால் வருகிறது.

தன் மகளுக்கு கிடைக்க வேண்டிய நீதிக்காக போராடிய ஹாசினியின் தந்தை பாபு, ஆசிஃபாவுக்காகவும் சேர்த்து போராடுவேன் என்கிறார். இன்னும் வலியிலிருந்து மீளாத ஹாசினியின் தந்தை, இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாகும் கடைசி குழந்தையாக ஆசிஃபா இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நம் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:

காஷ்மீரில் ஆசிஃபாவுக்கு நடந்த கொடுமையை எப்படி பார்க்கின்றீர்கள்?

இப்போதெல்லாம் குற்றம் செய்பவர்கள் குழந்தைகளைத்தான் குறி வைக்கின்றனர். அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள். ஏனென்றால், குழந்தைகளால் அவர்களது எதிர்ப்பை வெளிப்படுத்திவிட முடிவதில்லை. தங்களுடைய பெற்றோரிடத்திலும் குழந்தைகளால் தங்களுக்கு நேர்ந்தவற்றை விளக்கி சொல்ல முடியாது. இதனால், குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர்.

ஆசிஃபாவுக்கு நேர்ந்த கொடுமை குறித்து என்னால் முழுமையாக படிக்கக்கூட முடியவில்லை. அதுகுறித்து முழுமையாக நான் அறிந்துகொண்டால், சில நாட்களுக்கு என்னால் நிம்மதியாகவே இருக்க முடியாது. அதனால், அதனை தெரிந்துகொள்ள கூட நான் பயப்படுகிறேன்.

ஆசிஃபா வழக்கில் காவல்துறையைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டிருப்பதை எப்படி பார்க்கின்றீர்கள்?

ஆசிஃபாவை காக்க வேண்டிய காவல் துறையை சேர்ந்தவர்களே அந்த குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். ஒரு தந்தையாக சொல்ல வேண்டுமென்றால், அந்த போலீஸ்காரர்களை உடனடியாக தூக்கிலிட வேண்டும். யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. இதில் எந்தவொரு விவாதமும் வேண்டியதில்லை.

ஆசிஃபாவுக்கு நேர்ந்த கொடுமைக்கு பின்னால் இருக்கும் மதம், அரசியல் பின்னணிகள் குறித்து…?

மதத்தின் பெயரால் ஆசிஃபா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறாள். குற்றவாளிகளை காப்பாற்ற பாஜக அமைச்சர்களே போராட்டம் நடத்தும் நிலைமை உள்ளது? மதங்களுக்காக குழந்தைகள் பலியிடப்படுவதை என்ன சொல்வது?

ஆசிஃபா ஒரு குழந்தை. மதத்திற்காக ஒரு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் கொடூரமானவர்கள். இப்போது மதத்தை வைத்து குற்றவாளிகள் தப்பிக்க நினைக்கின்றனர். குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும் என எந்த மதம், கடவுள் சொன்னது?

எல்லாரும் உறவுகள்தானே. குற்றவாளிகளை காப்பவர்களும் குற்றவாளிகள்தானே. அவர்களை காக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் தவறானவர்கள் தான். குற்றவாளிகளுக்கு துணை நிற்பவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

ஒரு பெற்றோராக எங்களால் இன்னும் இந்நாட்டில் பாதுகாப்பாக உணர முடியவில்லை. ஹாசினிக்கு நேர்ந்த கொடுமைக்கு பிறகு என் மகனை நான் வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட அனுமதிப்பதில்லை. அவனை பள்ளிக்கு அனுப்பவே நான் பயப்படுகிறேன். இந்த சட்டங்களாலும், நடைமுறைகளாலும் நாங்கள் பாதுகாப்பாக உணரமுடிவதில்லை.

பாதிக்கப்பட்ட தந்தை என்கிற வகையில் சொல்லுங்கள். நீதி அமைப்பும், சட்ட அமைப்பும் தாமதமற்ற நீதியை வழங்கும் நிலையில் உள்ளதா?

எல்லாருக்குமான பாதுகாப்பை இந்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். அத்தகைய வகையில் சட்டங்கள் கடுமையானதாகவும், சட்ட நடைமுறைகள் எளிதானதாகவும் இருக்க வேண்டும்.

இங்கே, நீதியைப் பெற தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது. என் மகள் ஹாசினியின் வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைத்துவிட்டாலும், குற்றவாளி மேல் முறையீடு செய்திருக்கிறார். அதை எதிர்த்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என போராடிக்கொண்டே இருக்க வேண்டும். விசாரணை வேகமாக நடந்தும், காவல் துறையினர் தங்களால் இயன்ற ஒத்துழைப்பை வழங்கியும் நீதியை உடனடியாக பெற முடிவதில்லை.

பல வழக்குகளை காவல் நிலையத்தில் பதியவே முடிவதில்லையே. அத்தகைய வழக்குகள் நீதிமன்றத்திற்கு வருவதற்கே மிகப்பெரிய சட்ட போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. ஹாசினி வழக்கில் காவல் துறையினர் அவர்களை கடமையை செய்தனர். அரசுசாரா அமைப்பு ஒன்று சட்ட போராட்டத்தில் என்னுடன் துணை நின்றது. ஆனால், இதே நிலைமை எல்லா வழக்குகளிலும் நடக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஆசிஃபா வழக்கில் காவல் துறையினரே குற்றம் செய்திருக்கிறார்களே!

ஒரு தந்தையாக இந்த சட்ட அமைப்பில் என்ன மாற்றங்களை எதிர்பார்க்கின்றீர்கள்?

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களை 6 மாதங்களுக்குள் விசாரித்து குற்றவாளியென நிரூபிக்க வேண்டும். அதன்பின், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது மட்டுமே பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நீதியாக இருக்க முடியும். தக்க தண்டனையாக இருக்கும். இவையனைத்தும் சட்டத்திற்குட்பட்டு நிகழ வேண்டும்.

அந்த வகையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்.நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடாது. அதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு.

குழந்தைகளை வன்கொடுமை செய்தவர்களுக்கு நாம் பாடம் புகட்ட முடியாது. அவர்கள் மனிதர்களே அல்ல; கொடூரமானவர்கள். மரண தண்டனை வழங்கினால் மட்டுமே இதுபோன்ற கொடுமைகளை இழைக்க அவர்களுக்கு கொஞ்சமாவது பயம் வரும்.

ஆசிஃபாவுக்கு நீதி கிடைக்குமா?

ஆசிஃபாவும் எனது மகளே. ஆசிஃபாவுக்கும் நீதி கிடைக்க நான் போராடத் தயாராக இருக்கிறேன். நான் யாருக்கும் அஞ்சமாட்டேன். எந்த அரசியலுக்கும் உட்படமாட்டேன். ஆசிஃபாவுக்கு நீதி கிடைக்க என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்வதற்கு தயாராக இருக்கிறேன். என்னுடைய வேலையைவிட்டு அவளுக்காக போராட நினைக்கிறேன்.

Leave a comment