நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த 3 இந்தியர்களுக்கு 517 ஆண்டுகள் சிறை

969 0

துபாயில் நிதி நிறுவனம் நடத்தி முதலீட்டாளர்களின் பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த மூன்று இந்தியர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 517 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

கோவாவின் வடக்கு பகுதியில் உள்ள மபூசா பகுதியை சேர்ந்தவர் சிட்னி லிமோஸ். இவரது மனைவி வாலனி. இவர்களுடன்  ரியான் டிசோசா என்ற இந்தியரும் சேர்ந்து துபாயில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். தங்களது நிதி நிறுவனத்தில் அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளை முதலீடு செய்து வந்தால் 120 சதவீதம் லாபம் தருகிறோம் எனக்கூறி பலரை சேர்த்தனர்.

அவர்களது கவர்ச்சிகரமான அறிவிப்பால் ஈர்க்கப்பட்ட பலர் அந்த நிறுவனத்தில் பல கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்தனர். ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் அதிகமானோரும் இதில் அடங்குவார்கள். முதலில் சொன்னபடி குறிப்பிட்ட தொகையை அந்த நிறுவனம் திருப்பி தந்தது. அதன்பின்னர், நாளடைவில் அவர்கள் தங்கள் முதலீட்டாளர்களுக்கு லாபத் தொகையை திருப்பித் தரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீடு செய்தவர்கள், தங்களது பணத்தை திரும்ப தருமாறு வலியுறுத்தினர். ஆனால் அந்த நிறுவனம் பணத்தை திருப்பி தரவில்லை. இதுதொடர்பாக அவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, லிமோஸ், ரியான் டிசோசா உள்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு அங்குள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் துபாய் நீதிமன்றம் நேற்று தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பு வழங்கிய துபாய் நீதிபதி, நிதி நிறுவனத்தின் உரிமையாளரான லிமோஸ், வாலனி மற்றும் டிசோசாவிற்கு 517 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

ஏற்கனவே, 2015-ம் ஆண்டு கோவாவில் நடந்த கால்பந்து போட்டியில் முக்கிய விளம்பரதாரராக லிமோஸின் நிறுவனம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment