சென்னையில் வைகோ – திமுகவினர் கருப்பு கொடி போராட்டம்

4486 0

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். 

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் கருப்பு கொடி ஏந்தியும், கருப்பு சட்டை அணிந்தும் போராட்டம் நடத்தினார்கள்.

சென்னையில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சைதாப்பேட்டையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரதமர் மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார். அப்போது அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து பேசினார்.

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் கிண்டி எஸ்டேட்டில் முற்றுகை போராட்டம் நடந்தது. தொழிலாளர் நல குடியிருப்பில் உள்ள மா.சுப்பிரமணியன் வீட்டில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஊர்வலமாக புறப்பட்டு கிண்டி பஸ் நிலையம் வந்தனர்.

மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு, எம்.எல். ஏ.க்கள் தாயகம் கவி, கே.எஸ்.ரவிச்சந்திரன், வாகை சந்திரசேகர், ப.ரெங்கநாதன் மற்றும் தனசேகரன், ரெங்கராஜன் எம்.பி., சுப.வீர பாண்டியன், கவிஞர் காசி முத்து மாணிக்கம், ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா உள்ளிட்டவர்கள் ஊர்வமாக சென்றனர்.

கருப்பு சட்டை அணிந்து மோடிக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பியவாறு பஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். ‘‘திரும்பி போ’’ ‘‘திரும்பி போ’’ தமிழகத்தை விட்டு ‘‘திரும்பி போ’’ என கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர்.

பஸ் நிலையத்தை சூழ்ந்து கொண்ட தி.மு.க.வினரின் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்களும் இதில் பங்கேற்றனர்.

முன்னதாக மா.சுப்பிரமணியன் தனது வீட்டில் ராட்சத பலூன் ஒன்றை பறக்கவிட்டார்.

அவரது வீட்டின் மாடியில் இருந்து ‘‘தமிழகத்தை வஞ்சிக்கும் ‘‘மோடி கோ-பேக்’’ என்று அந்த கருப்பு பலூனில் எழுதப்பட்டு இருந்தது. ஆயிரக்கணக்கான கருப்பு நிற சிறிய பலூன்களையும் தொண்டர்கள் பறக்க விட்டனர்.

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சைதாப்பேட்டையில் உள்ள கலைஞர் பவளவிழா வளைவு அருகே கருப்பு சட்டை அணிந்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கருப்பு சேலை அணிந்து கலந்து கொண்டார். இதில் மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., மு.க.தமிழரசு, அவரது மகனும் நடிகருமான அருள்நிதி, முன்னாள் அமைச்சர் புலவர் இந்திர குமாரி, எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.மோகன், கு.க.செல்வம், நிர்வாகிகள் கென்னடி, வெல்டிங் மணி, பொன்னுரங்கம், கே.ஏழுமலை, ஜெ.கருணாநிதி, ராமலிங்கம், அகஸ்டின் பாபு, சேப்பாக்கம் மதன்மோகன், பா.சிதம்பரம், மாரி, பாபா சுரேஷ், கோவிந்தன், உதயசூரியன், கிருஷ்ண மூர்த்தி, செல்வம், சோமசுந்தரம் உள்பட 800-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், பிரதமர் மோடிக்கு எதிராக கோ‌ஷமிட்டனர்.

இதனால் போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்து நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வுக்கு கொண்டு சென்று தங்க வைத்தனர்.

சென்னை விமான நிலையம் அருகே காஞ்சி கிழக்கு மாவட்ட தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் விமான நிலையம் அருகே டிரைடன்ட் ஓட்டல் அருகில் ஜி.எஸ்.டி. சாலைக்கு சென்று மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இதில் திருச்சி சிவா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. வைத்திலிங்கம், துரைசாமி, படப்பை மனோகரன், தண்டபாணி, நரேஷ் கண்ணா, ஜெயக்குமார், வனஜா உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதானார்கள். கருப்பு கொடி, கருப்பு சட்டையுடன் பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து கோ‌ஷமிட்டப்படி இருந்தனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எஸ்.சி. எஸ்.டி. பிரிவு மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, ஆலந்தூர் மண்டல காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் பிரசாத் ஆகியோர் தலைமையில் கருப்பு கொடியுடன் விமான நிலையம் வந்த காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் கையில் கொண்டு வந்த 2 புறாக்களின் மீது பலூன்களை கட்டி பறக்கவிட்டனர்.

தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமையில் 200 பேர் அடையார் மத்திய கைலாஷ் பகுதியில் மோடிக்கு கருப்பு கொடி காட்ட சென்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து மறித்து கைது செய்தனர். கராத்தே தியாகராஜன், தி.நகர் ஸ்ரீராம், திருவான்மியூர் மனோகரன், சைதை முத்தமிழ், நாச்சி குளம் சரவணன், ராமச்சந்திரன், மயிலை ஆதி, சாந்தி, மலர்க்கொடி உள்ளிட்டவர்களை கைது செய்து அங்குள்ள சமுதாய கூடத்திற்கு கொண்டு சென்றனர்.

விமான நிலையத்தை முற்றுகையிட வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ. பீமாராவ் தலைமையிலான 25 பேர் கைது செய்யப்பட்டனர். சி.ஐ.டி.யூ. காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் கருப்புக் கொடி காட்ட வந்த 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

Leave a comment