பொது மக்களின் காணிகளில் இராணுவத்தினர் பேக்கரி அமைப்பது என்ன நியாயம்? ராஜித்த கேள்வி

218 0

வடக்கில் பொது  மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும்.  தெற்கு மக்களின் காணிகளை  இராணுவம் அபகரித்தால் அவர்கள் வெறுமனே இருப்பார்களா? பொது மக்களின் காணிகளில் இராணுவத்தினர் பேக்கரி அமைத்து வியாபாரம் செய்வது சரியா என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன கேள்வியெழுப்பினார்.

அத்துடன் வழக்கு தொடுக்கப்படாத அரசியல் கைதிகளை  உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கும் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்

கேள்வி  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கத்திற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டதா? கூட்டமைப்பு பிரதமருக்கு ஆதரவளிக்க நிபந்தனை விதிக்கப்பட்டதா?

பதில் அவ்வாறு எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. அவர்கள் 2015 ஆம் ஆண்டு முன்வைத்த கோரிக்கையை தற்போது மீண்டும் முன்வைத்துள்ளார்கள். அதாவது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். அரசியல் கைதிகள் தொடர்பான வழக்குகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். காணமால்போனோர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என்பனவே கூட்டமைப்பின் பிரச்சினையாகும். அது நீண்டநாள் பிரச்சினையாகும். அவை உண்மையில் விரைவுபடுத்தப்பட வேண்டும். அதற்காக நிபந்தனை விதிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அது தொடர்பில் பேசவுமில்லை.

கேள்வி வடக்கில் 650 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளனவா? நம்பிக்கையில்லாப் பிரேணை மீதான எதிர்ப்பின் காரணமாக இது நடைபெறுகின்றனவா?

பதில் வடக்கில் 650 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. ஆனால் அவ்வாறு விடுவிப்பதில் என்ன தவறிருக்கின்றது. அந்த மக்கள் படும் கஷ்டங்களை நீங்கள் நேரில் சென்று பார்த்தால் அவர்களின் அவலம் உங்களுக்கு தெரியும். உங்கள் காணிகளை யாராவது இவ்வாறு பறித்தெடுத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள். உங்களுக்கு அப்படி நடந்தால்தான் புரியும். தம்மிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளை மீள கோரும் உரிமை அவர்களுக்கு இருக்கின்றது.

கேள்வி எனினும் காணி விடுவிப்பானது நம்பிக்கையில்லாப் பிரேணை காரணமாக விரைவுபடுத்தப்பட்டுள்ளதா?

பதில் நீங்கள் எப்படி அவ்வாறு கூற முடியும். 650 ஏக்கர் காணிகளுக்கான நில அளவையை இரண்டு வாரங்களுக்குள் செய்ய முடியுமா? அதுமட்டுமன்றி மக்களின் காணிகளை இராணுவத்தினர் பேக்கரி அமைத்துக் கொண்டிருப்பது நியாயமானதா? தெற்கில் இவ்வாறு நடந்தால் என்ன செய்வீர்கள்? வடக்கு மக்களின் காணிகள் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதை நான் மிகவும் திடமாக வலியுறுத்திக் கூறுகின்றேன்.

அத்துடன் அரசியல் கைதிகளை விடுவியுங்கள். வழக்குப் போடாமல் இருக்கும் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் இதனை கூறுவதற்கு நான் பயப்படவில்லை. அரசியல் கைதிகளுக்கு தண்டனை வழங்கியருந்தால் கூட இந் நேரம் அவர்கள் வெ ளியில் வந்திருப்பார்கள். 12 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்களை கடந்த அரசாங்கம் புனர்வாழ்வளித்து விடுதலை செய்தது. அது வொரு நல்ல செயற்பாடாகும். அதேபோன்று இந்த அரசாங்கமும் சில செயற்பட வேண்டும். மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும்.

Leave a comment