பரவிப்பாஞ்சான் மக்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்

338 0

download-44இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி நேற்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பரவிப்பாஞ்சான் மக்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று(8) கைவிட்டுள்ளனர்.

பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளை மூன்று மாதத்திற்குள் மீளப் பெற்றுக்கொடுப்பதாக அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொலைபேசியில் வழங்கிய உறுதிமொழியை அடுத்தே மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர்.

கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் வரை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருத்திருந்தனர். எனினும் இதற்கு உகந்த பதில் கிடைக்காத நிலையில், பரவிப்பாஞ்சான் மக்கள் நேற்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் பாரிய அளவில் போராட்டமொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் அதுவரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஒத்திவைக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் இன்று மாலை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு மூன்று மாதகாலத்திற்குள் மக்களின் காணிகளை மீளப்பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்தார். அது மாத்திரமன்றி எதிர்வரும் திங்கட்கிழமை காணி உரிமையாளர்களுடன் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை நேரில் சென்று பார்வையிடுவதாகவும் உறுதியளித்தார். இதனையடுத்தே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.