தூத்துக்குடி அருகேயுள்ள கோவளம் கடற்கரையில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள கோவளம் கடற்கரையில், கடந்த பிப்.11-ம் தேதி ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு மீன்கள் இறந்து கரை ஒதுங்கிக்கிடந்தன.
மீன்வளத்துறை அதிகாரிகள், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் கடற்கரையில் ஆய்வு செய்தனர். இறந்து கிடந்த மீன்கள் மற்றும் கடல்நீர் மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஆய்வின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், 2 மாதங்கள் ஆகியும் ஆய்வுகள் குறித்த முடிவுகள் வெளியாகவில்லை, எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று அதிகாலை மீண்டும் ஏராளமான மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. கோவளம் கடற்கரையில் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு ஆங்காங்கே மீன்கள் இறந்து கிடந்தன. ஏற்றுமதி ரகமான கிளிஞ்சான் மீன்களும், நவரை, வெளா போன்ற மீன்களும் அதிகம் இறந்து கிடந்தன. 250 கிராம் முதல் 1 கிலோ வரை எடை கொண்டவையாக அவை இருந்தன.
கடலில் கலக்கும் கழிவு
மீனவர் சங்கத்தை சேர்ந்த ஏ.டி.ராயப்பன் கூறும்போது, “இங்குள்ள சில ஆலைகள் ரசாயன கழிவுகளைக் கடலுக்குள் விடுகின்றன.
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி ஆகியவை மேற்கொண்ட ஆய்வில், இந்த பகுதி கடல் நீரில் அளவுக்கு அதிகமாக அமோனியா இருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளரிடம் ஏற்கெனவே புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால்தான் மீன்கள் மீண்டும் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, கடலுக்குள் கழிவுநீரை அனுப்ப அமைக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்களை அகற்ற வேண்டும்” என்றார்.

