முன்னாள் போராளிகள் சாரதிகளாக வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கள் மிகமிக அரிது

298 0

sritharan-jaffna-tna-mp-1-450x253முன்னாள் போராளிகள் சாரதிகளாக வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கள் மிகமிக அரிதாகவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், முன்னாள் போராளிகள் பலருக்கு சாரதி வேலை வாய்ப்புக்கள் பின்னடிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சாரதி அனுமதிப் பத்திரங்கள் வைத்திருக்கின்ற அனைவருக்கும் சரியான வேலைவாய்ப்பு வழங்கப்படுகின்றதா என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் போராளிகள் சிலருக்கு புனர்வாழ்வு முகாம்களில் வைத்து புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர், சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டதாகவும் ஏற்கனவே சாரதி அனுமதிப் பத்திரங்களை வைத்திருப்பவர்களும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், சாரதி அனுமதிப் பத்திரங்கள் உள்ள சில முன்னாள் போராளிகளுக்கு இலங்கை போக்குவரத்து சபை மற்றும் அரச திணைக்களங்களில் சாரதிகளாக வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புக்கள் அரிதாக உள்ளதென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கு வயதில் கூடியவர்கள் அல்லது வேலைவாய்ப்புக்கான கல்வித் தரம் இல்லை என்பது போன்ற காரணங்களால் முன்னாள் போராளிகளுக்கான வேலைவாய்ப்பு பின்னடிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, முன்னாள் போராளிகளுக்கென வயதெல்லையை வறையறுத்து அவர்களுக்கான திணைக்களங்களிலும், இலங்கை போக்குவரத்துச் சபையிலும் சாரதிகளுக்கான அனுமதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.