கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நால்வர் ஆயுதங்களுடன் அத்துருகிரிய மற்றும் ஹோகந்தர பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒழுங்குபடுத்தப்பட்ட குற்ற தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் அப்பகுதிகளை சேர்ந்தவர்களே என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 19ம் திகதி அத்துருகிரிய கல்வருசாவ வீதியில் நபரொருவரை சுட்டு கொலை செய்தமை மற்றும் கடந்த 26ம் திகதி அத்துருகிரிய பகுதியில் உள்ள வீடொன்றிற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர்கள் சம்பந்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் டீ 56 ரக துப்பாக்கி, 12 ரவைகள், 6 கத்திகள், மோட்டார் சைக்கிள் 1, முச்சக்கர வண்டி 1 மற்றும் 2 கிலோ கேரளா கஞ்சா, கஞ்சா வியாபாரத்தினால் கிடைத்த 80,000 ரூபா பணம் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட நபர்கள் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் ஒழுங்குபடுத்தப்பட்ட குற்ற தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

