மூடநம்பிக்கைக்கு எதிராக விழிப்புணர்வு – தமிழக மாணவிக்கு அமெரிக்க விருது

210 0

மூடநம்பிக்கைக்கு எதிராக கிராம மக்கள் மற்றும் பள்ளி சிறுமிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவிக்கு அமெரிக்க நிறுவனம் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள கிளாசேரியை சேர்ந்தவள் எஸ்.பானுபிரியா (13). இவள் அங்குள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் 8-வது வகுப்பு படிக்கிறாள்.

இவள் சிறிய வயதில் மிகப் பெரிய சாதனை படைத்து இருக்கிறாள். மூடநம்பிக்கைக்கு எதிராக கிராம மக்கள் மற்றும் பள்ளி சிறுமிகளிடம் விழிப் புணர்வை ஏற்படுத்தி வருகிறாள்.

அதற்காக தனது கிராமத்தில் பேரணிகள், தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறாள். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்களை அழைத்து வந்து கிராம மக்களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்தும், அவற்றை சிகிச்சை மூலம் குணப்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு அளித்து வருகிறாள்.

மாதவிலக்கு காலங்களில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார முறைகள் குறித்தும் விளக்கம் அளித்து வருகிறாள். இதனால் 1500-க்கும் மேற் பட்ட பெண்கள் பயனடைந்துள்ளனர்.

அவளது இத்தகைய சேவையை பாராட்டி அமெரிக்க நிறுவனம் விருது வழங்கி கவுரவித்துள்ளது. டி.எச்.எப்.எல்’ பிராமெரிக்கா ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் ‘சமூக சேவை’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுக்காக பள்ளி மாணவ, மாணவிகளிடம் இருந்து 4 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அவற்றில் 29 பேர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். அவர்களில் மாணவி பானுப்ரியாவும், டெல்லி பப்ளிக் பள்ளியை சேர்ந்த இஷிதா மங்களா என்ற மாணவியும் விருதுக்கு அறிவிக்கப்பட்டனர்.

விருது வழங்கும் விழா புதுடெல்லி அருகேயுள்ள குரு கிராமில் நடந்தது. அதில் மாணவிகள் பானுபிரியா, இஷிதா மங்களா ஆகியோருக்கு விருதுகள் மற்றும் தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டது.

மேலும் ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது. இவற்றை ‘எஸ்.ஓ.சி.ஏ.’ சமூக சேவை அமைப்பு அதிகாரி அனுப்பாப்பி வழங்கினார்.

Leave a comment