ஒடிசா மலைப்பகுதியில் 7 கி.மீ. நடந்து பழங்குடியினப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த இளம் வைத்தியர்!

303 0

ஒடிசா மாநிலத்தில், கந்தமால் மலைப்பகுதியில் 7 கி.மீ. நடந்து சென்று, பழங்குடியினப் பெண்ணுக்கு இளம் டாக்டர் ஒருவர் பிரசவம் பார்த்துள்ளார். இவருக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கந்தமால் மாவட்டத்தில் தும்மிடிபண்டா சுகாதார மையத்தில் டாக்டராக வேலை செய்து வருபவர் யக்னதத்தா ராத். இந்த சுகாதார மையத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைப் பகுதியில் பாலம் என்ற மலை கிராமம் உள்ளது.

இங்குள்ள சீதாதாடு ரெய்தா (வயது 23)என்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்தப் பெண்ணின் உறவினர்கள் சுகாதார மையத்துக்கு வந்து தகவல் கொடுத்துள்ளனர்.

 

ஆனால், பாலம் கிராமத்துக்குச் செல்ல சாலை வசதி இல்லை. ஆறுகளையும், கரடுமுரடான சாலைகளையும் கடந்துதான் அங்கு செல்ல முடியும். இதையடுத்து, சுகாதார மையத்தில் பணியாற்றும் டாக்டர் யக்னதத்தா ராத் தனது தேவையான மருத்துவ உபகரணங்களையும், மருந்துகளையும் எடுத்துக்கொண்டு நடந்தே அந்த கிராமத்துக்குச் சென்றார்.

தன்னால் எந்த அளவுக்கு வேகமாக செல்ல முடியுமோ அந்த வேகத்தில் மலைப்பகுதியில் ஏறி, அந்தக் கிராமத்தை அடைந்தார். ஆனால், அதற்குள் இளம்பெண் ரெய்தாவுக்கு திறந்த வெளியில் பிரசவம் நடந்து குழந்தை பிறந்துவிட்டது.

ஆனால், அந்தக் குழந்தையின் தொப்புள்கொடி மட்டும் சரியாக வராமல் இருந்தது. இதையடுத்து. அங்கு சென்ற டாக்டர் யக்னதத்தா அங்கிருந்தவர்களை நகர்ந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். அந்தப் பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை செய்து, குழந்தையின் தொப்புள்கொடியை பத்திரமாக எடுத்து நலமாக்கி, குழந்தையை தாயிடம் பத்திரமாக ஒப்படைத்தார்.

அதன்பின் ரெய்தாவையும், அவரின் குழந்தையையும் பத்திரமாக மலையில் இருந்து கீழே இறக்கி, அவர்களுக்கு சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்க டாக்டர் யக்னதத்தா உதவி செய்தார். டாக்டர் யக்னதத்தாவின் செயல் ஒடிசா மாநிலம் முழுவதும் பரவி அவருக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தாயிடம் குழந்தையை ஒப்படைக்கும் டாக்டர் யக்னதத்தா ராத்தின்

இது குறித்து டாக்டர் யக்னாதத்தா கூறுகையில், ”ரெய்தாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது என்று எனக்கு தகவல் வந்ததும் அங்கு நடந்தே சென்றேன். நான் அங்கு செல்வதற்குள் அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்துவிட்டது. ஆனால் தொப்புள்கொடியில் சிக்கல் ஏற்பட்டு அதை அகற்ற முடியாமல் இருந்தனர். பின்னர் தாய்க்கும், குழந்தைக்கும் சிகிச்சை அளித்து பத்திரமாக தொப்புள் கொடி அகற்றப்பட்டது. குழந்தை 2.5 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருந்தது.

இதையடுத்து, ஆம்புலன்ஸை மலை அடிவாரத்தில் நிறுத்தக்கூறி ரெய்தாவையும், குழந்தையையும் அழைத்துச் சென்றோம். மலைப்பகுதியில் கரடுமுரடான பாதைகளையும், ஆறுகளையும் கடந்து ஆம்புலன்ஸை அடைந்தோம். பின சுகாதார நிலையத்துக்கு ரெய்தாவையும், குழந்தையையும் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தோம். இப்போது தாயும், குழந்தையும் நலமுடன் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

டாக்டர் யக்னதத்தா ராத்தின் செயலை மாநிலத்தில் உள்ள அனைத்து டாக்டர்களும் புகழ்ந்து வருகின்றனர். அவருக்கு கந்தமால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Leave a comment