உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ளது காவிரி மேலாண்மை வாரியம்தான் – தமிழக அரசு அறிக்கை

195 0

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ள செயல்திட்டம் காவிரி மேலாண்மை வாரியம்தான் என தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி இறுதி தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட், 6 வார காலத்துக்குள் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்துவதற்கான செயல்திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த 6 வார காலக்கெடு நாளையுடன் (வியாழக்கிழமை) முடிவடைகிறது.

இந்த நிலையில் காவிரி நீரை பெறும் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை மத்திய நீர்வளத்துறை அமைச்சக அதிகாரிகள் அழைத்து பேசி, காவிரி விவகாரத்தில் எழுத்துப்பூர்வ பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய கேட்டுக்கொண்டனர். அதன்படி கர்நாடக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

இதேபோல் தமிழக அரசும் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், காவிரி வழக்கு தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருப்பது காவிரி மேலாண்மை வாரியம் தான் என்றும், குறிப்பிட்டுள்ள காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தையே அமைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு மேலாண்மை வாரியம் தான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து மத்திய நீர்வளத் துறை செயலாளர் தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரியுடன், தமிழக அதிகாரிகள் குழு இன்று சந்தித்து  காவிரி மேலாண்மை வாரியம் குறித்து நேரில் வலியுறுத்தியது.

Leave a comment