30-ந் தேதி முதல் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்- ராமதாஸ்

267 0

உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி 30-ந் தேதி முதல் போராட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக மக்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அளித்த காலக்கெடு நாளையுடன் முடிவடையும் நிலையில், மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டு மக்களின் முதுகில் மீண்டும் ஒருமுறை குத்த மத்திய அரசு தயாராகி விட்டதாகவே தோன்றுகிறது. இது மன்னிக்க முடியாத துரோகமாகும்.

ஒரு தேர்தல் வெற்றிக்காக ஒரு மாநிலத்தின் மக்களும், விவசாயிகளும் இறந்தாலும் பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு மத்திய ஆட்சியாளர்களின் மனம் கல்லாக மாறியிருக்கிறது. அவர்களின் துரோகத்திற்கு தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்களும் துணை போய்க்கொண்டிருக்கிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு செய்த துரோகத்தைக் கண்டித்தும், உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் முதல்கட்டமாக வரும் 30-ந் தேதி முதல் கோரிக்கை நிறைவேறும் வரை தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டத்தை நடத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இது அரசியலுக்காகவோ, அரசியல் கட்சியின் சார்பிலோ நடத்தப்படும் போராட்டம் அல்ல. மாறாக உழவர்களுக்காக மக்களால் நடத்தப்படும் போராட்டம் ஆகும். அரசியல் சார்பற்ற இப்போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அதைத் தொடர்ந்து வரும் 30-ந் தேதி சென்னையில் நடைபெறவுள்ள அனைத்து விவசாயிகள் சங்கங்கங்களின் கூட்டத்தில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது.

உழவர் அமைப்புகள் அறிவிக்கும் போராட்டத்திற்கு பா.ம.க முழு ஆதரவு அளிப்பதுடன், அந்த போராட்டங்களிலும் பங்கேற்கும். மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை பல வழிகளில் பா.ம.க. தொடர்ந்து போராடும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment