நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடு – மனோ

252 0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் மனநிலையிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

நேற்று மாலை தலவாக்கலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆளும் கட்சியின் பங்காளியாக நாம் இருக்கின்ற பொழுதிலும் ஐக்கிய தேசிய கட்சி துரோகம் இழைப்பதால் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு முடிவு ஒன்றை எடுக்க நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

எங்கள் கட்சிக்கும், அவரின் கட்சிக்கும் இடையில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. உள்ளுராட்சி தேர்தலின் பொழுது பல இடங்களில் உறுதியளிக்கப்பட்ட பட்டியலின் அங்கத்துவங்கள் தராமல் ஐக்கிய தேசிய கட்சி துரோகம் செய்துள்ளது.

கொழும்பில் மட்டுமல்லாது நுவரெலியாவிலும் இரண்டு, மூன்று ஆசனங்களை எங்களுக்கு தராமல் ஐக்கிய தேசிய கட்சி ஏமாற்றியுள்ளது.

இதற்கு அவர்கள் உரிய பதில் கூற வேண்டும். உரிய பதில் கிடைத்தால் மாத்திரமே நாங்கள் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தீர்மானிப்போம்.

ஆனால் நம்பிக்கையில்லா பிரேரணையை பயன்படுத்திக் கொண்டு கீழ்தனமாக கொள்கை மாறி பணத்திற்கு விலை போய், பதவிக்கு விலை போய் நடக்கும் ஒரு கொள்கை எம் கட்சிக்கு கிடையாது.

அதேபோல் இவ்வாறான நல்ல சிந்தனை, நல்ல கொள்கை, நல்ல எண்ணம், கௌரவமான நடத்தை ஐக்கிய தேசிய கட்சிக்கும் இருக்க வேண்டும். அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இருக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment