இன்று உலக தண்ணீர் தினம்- இயற்கை நீரை பாதுகாப்போம்

452 0

உலக தண்ணீர் தினமான இன்று நீரை வீணாக்காமல் பாதுக்காக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மனித குலத்திற்கு ஆதாரமாக விளங்கும் நீர்வளங்களை பாதுகாப்பதுடன், தண்ணீர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு வறட்சிக்கு மத்தியில் உலக தண்ணீர் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களின் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உலக தண்ணீர் தினத்தன்று நீரின் ஆற்றல் குறித்து தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ‘உலக தண்ணீர் தினமான இன்று நீரின் ஆற்றல் மற்றும் அதனை பாதுகாப்பது குறித்த முக்கியத்துவத்தை நாம் எண்ணி பார்க்க வேண்டும். நீரை வீணாக்காமல் பாதுகாத்தால் அது நம் நகரங்கள், கிராமங்களில் உள்ள மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்’ என டுவிட் செய்திருந்தார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது டுவிட்டரில், ‘உலக தண்ணீர் தினத்தன்று, நீரை குறைவாக பயன்படுத்த வேண்டும், உபயோகித்த நீரை மறுபடியும் பயன்படுத்த வேண்டும் மற்றும் மறுசுழற்சி செய்து உபயோக்க வேண்டும் என்ற மூன்று முக்கிய வாக்கியங்களை நினைவில் கொள்ள வேண்டும். இதனை பின்பற்றினால் மட்டுமே எதிர்கால சந்ததியினருக்கு வாழ தேவையான நீர் இருக்கும்’ எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், ஒடிசா மணற்சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்நாய்க் உலக தண்ணீர் தினத்தையொட்டி பூரிக் கடற்கரையில் மணற்சிற்பம் செதுக்கியுள்ளார். நீரை சேமிப்போம், வாழ்வை பாதுகாப்போம் என்ற வாக்கியத்துடன் அவர் வடித்த சிற்பம் நீர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் தினமானது ஒரு கருப்பொருளை மையமாக கொண்டு கொண்டாடப்படும். இந்த ஆண்டு ‘இயற்கை தண்ணீர்’ என்பதை மையமாக கொண்டு உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இயற்கை தண்ணீரை பாதுகாத்தால் மட்டுமே சுத்தமான நீரை உபயோகிக்க முடியும்.

சுற்றுச்சுழல் மாசுபாட்டால் உலகில் உள்ள மக்கள் அசுத்தமான நீரை குடித்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் 2.1 மில்லியன் மக்கள் மாசுபட்ட நீரை பயன்படுத்துகின்றனர். இந்த நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள நீர் தட்டுப்பாட்டை இயற்கையாக கிடைக்கும் நீரை பாதுகாப்பதால் மட்டுமே குறைக்க முடியும். அதனை மனதில் கொண்டு உலக தண்ணீர் தினத்தை கொண்டாடுவோம்.

Leave a comment