எம்.பி.க்களிடம் வாக்களிக்க பேரம் பேசிய விவகாரம்- ராஜினாமா செய்தார் பெரு அதிபர்

207 0

பாராளுமன்றத்தில் ஆதரவாக வாக்களிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் பேரம் பேசியதாக எழுந்த புகாரில் பெரு நாட்டின் அதிபர் பெட்ரோ பப்லோ குசின்ஸ்கி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பெரு நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்து வருபவர் பெட்ரோ பப்லோ குசின்ஸ்கி. இதற்கு முன் அமைச்சராக இருந்தபோது, அவர் பங்குதாரராக இருந்த நிறுவனத்துக்கு அரசு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதற்கு பொறுப்பேற்று அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.

அத்துடன் பதவி நீக்கம் செய்வது தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த பெரும்பாலான எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர். எனவே, விவாதம் நடத்துவதற்கு முன்னதாகவே அவர் பதவி விலகினால் முறையாக இருக்கும் என எம்.பி.க்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால், அதிபர் குசின்ஸ்கி பதவி விலக மறுத்து வந்தார்.

இந்த விவகாரம் கடந்த சில மாதங்களாக பெரு அரசியலில் புயலை கிளப்பி வந்த நிலையில், அதிபருக்கு சாதகமாக வாக்களிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் ஆளுங்கட்சியினர் பேரம் பேசும் வீடியோ வெளியானது. இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அதிபர் பதவியில் இருந்து குசின்ஸ்கி விலகினார். தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், அதே நேரத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கவில்லை எனவும் குசின்ஸ்கி கூறியுள்ளார்.

Leave a comment