ஐ.நா சபை கூட்டத் தொடரில் ஈழத் தமிழர்கள் சார்பில் நடை பெறும் பக்க அறை கூட்டங்களில் குழுவாக பங்கேற்றுவரும் 50க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ அதிகாரிகள் தமிழர் சார் பிரதிநிதிகளின் உரைகளைக் குழப்பியடித்துவருவதாக ஜெனீவாத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் 37ஆவது ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகின்றது. இந் நிலையில் இம்முறை வழமைக்கு மாறாக 50க்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் குறித்த கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ளனர்.
அவர்கள் பக்க அறை நிகழ்வுகளில் எங்கெல்லாம் தமிழர் பிரதிநிதிகள் உரையாற்றுகின்றனரோ அங்கு கூட்டமாகச் சென்று அமர்ந்துவிட்டு உரைகளைக் குழப்பிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்து கொண்டு தன்னுடைய கருத்துக்களை முன்வைத்தார். அதன்போது அவரின் கருத்துக்களை குழப்பும் வகையில் இலங்கையில் இருந்து சென்ற இராணுவ அதிகாரிகள் செயற்பட்டுள்ளனர்.
அதேபோல நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றில் தமிழர் தரப்பினருக்கும், முன்னாள் இராணுவ அதிகாரிகள் அணியினருக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. சுயநிர்ணய உரிமை தொடர்பாக இடம்பெற்ற பக்க அறைக் கூட்டத்திலேயே குறித்த முறுகல் நிலை தோன்றியுள்ளது. இதன்போது, அருட் தந்தை ஜெயபாலன், பேராசிரியர் போல் நியூமன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சபாநாயகர் நாகலிங்கம் பாலச்சந்திரன் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பா.உ கொலிங்ஸ் ஆகியோரும் இதில் பங்கேற்றிருந்தனர். மேலும், சென்னை உயர்நீதிமன்றின் முன்னாள் உயர் நீதியரசரும் இதில் பங்கேற்றுள்ளார். இந்நிலையிலேயே, முன்னாள் இராணுவ தரப்பின் அணியினருக்கும், இங்கு வாதங்களை முன்வைத்த தமிழர் தரப்பினருக்குமிடையே முறுகல் நிலை தோன்றியது.


