சிகாகோ பல்கலைக்கழகத்துக்கு ரூ.32½ கோடி வழங்கிய இந்திய தொழிலதிபர்

320 0

அமெரிக்காவில் வாழும் இந்திய தொழில் அதிபர் ஒருவர் சிகாகோ பல்கலைக்கழகத்துக்கு ரூ.32½ கோடி நன்கொடையாக வழங்கி உள்ளார்.

அமெரிக்காவில் வாழும் இந்திய தொழில் அதிபர் ரத்தன் எல்.கோசா (வயது 79). இவர் புதுமைகளை தேடுவதில் ஆர்வம் கொண்ட தொழில் முனைவோருக்கு உதவுவதற்காக சிகாகோ பல்கலைக்கழகத்துக்கு 5 மில்லியன் டாலர் (சுமார் ரூ.32½ கோடி) நன்கொடை வழங்கினார்.

இந்த தொகையைக்கொண்டு சிகாகோ பல்கலைக்கழகத்தின் போல்ஸ்கை மையத்தில் அவரது பெயரால், தொழில் அதிபர் ஆவதில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு ஒரு பயிற்சி திட்டம் தொடங்கப்படும்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்த திட்டத்துக்கு நன்கொடை வழங்குவதற்காக நான் காசோலை எழுதிவிட்டு, கண்களை மூடிக்கொண்டு, நான் இந்த நாட்டுக்கு வந்த முதல் நாளையும், என் கையில் இருந்த சொற்ப தொகையையும் எண்ணிப்பார்த்தேன். நான் பெற்றதை திரும்ப அளித்து, அடுத்த தலைமுறை தொழில் அதிபர்களுக்கு உதவும் நிலைக்கு வந்து இருப்பதை எண்ணி மிகவும் நன்றியுடன் இருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

இந்தியாவில் காஷ்மீரை பூர்வீகமாக கொண்ட இவர், 1970-களில் அமெரிக்கா சென்று, மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் ‘ஆராய்ச்சி பெலோஷிப்’ கிடைத்து படித்தார். அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த தொகை வெறும் 3 டாலர் (சுமார் ரூ.195) மட்டும்தான்.

படித்து முடித்து 1981-ம் ஆண்டு அம்சிஸ்கோ என்ற நிறுவனத்தை தனது வீட்டின் தரைத்தளத்தில் தொடங்கினார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில் தொழிலில் உயர்ந்து 55 ஆயிரம் சதுர அடி அளவிலான பரப்பளவில் நிறுவனத்தை மாற்றுகிற அளவுக்கு உயர்ந்தார்.

இப்போது சிகாகோ பல்கலைக்கழகத்துக்கு நிதி உதவி வழங்கியதின் காரணம் பற்றி அவர் குறிப்பிடுகையில், “ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்க்கையில் சில இடங்களில் உதவி தேவை என்பதை என் தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து நான் அறிந்து கொண்டிருக்கிறேன். யாரும் தங்களது சொந்த முயற்சியில் வெற்றி பெறவில்லை. எனவேதான் தொழில் அதிபராக வர விரும்புவோருக்கு வழிகாட்டுகிற விதமாக இந்த பயிற்சி திட்டத்துக்காக நிதி உதவி அளித்துள்ளேன்” என கூறினார்.

Leave a comment