தமிழக அரசு வருமானத்தில் 40 சதவீதம் அரசு ஊழியர் சம்பளத்துக்கு செல்கிறது

651 0

தமிழக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தில் பெரும் பகுதி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியமாக செல்கிறது.

தமிழக அரசில் 14 லட்சத்து 5 ஆயிரத்து 59 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 6 லட்சத்து 98 ஆயிரத்து 32 பேர் நிரந்தர ஊழியர்களாகவும், 7 லட்சத்து 7 ஆயிரத்து 27 பேர் தற்காலிக ஊழியர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள்.

இவர்கள் தவிர அரசு சார்பு நிறுவனங்கள், வாரியங்கள் போன்றவற்றில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 498 பேர் பணியாற்றி வருகிறார்கள்.

14 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் பென்‌ஷன்தாரர்களுக்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.62 அயிரத்து 908 கோடி சம்பளம் மற்றும் ஓய்வூதிமாக வழங்கப்படுகிறது. இது ஒட்டுமொத்த தமிழக அரசு வருமானத்தில் 40 சதவீதம் ஆகும்.

இந்தியாவிலேயே அரசு ஊழியர்களுக்கு மாநில வருவாயில் அதிக தொகையை வழங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. இதில் மராட்டியம் முதலிடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தில் 43 சதவீத வருமானம் அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக செல்கிறது.

தமிழ்நாட்டில் 2015-16 நிதியாண்டில் 40 சதவீதமும், 2016-17-ல் 39 சதவீதமும் 2017-18-ல் 39 சதவீதமும் செலவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் 27 சதவீதம் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு செலவிடுகிறார்கள். குஜராத்தில் இது 32 சதவீதமாக உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக பற்றாக்குறை பட்ஜெட் போடப்பட்டு வருகிறது. 2017-18ல் ரூ.15 ஆயிரம் கோடி பற்றாக்குறை உள்ளது. அரசு வருமானத்தில் பெருமளவு அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக செல்வதால் இதை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக தேவையற்ற ஊழியர்களை குறைப்பது, சில பணிகளை அவுட்சோர்சிங் முறையில் செய்வது, ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் ஈடுபடுவடுத்துவது போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக சீரமைப்பு குழு ஒன்றை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேபோல அரசு ஊழியர் சங்கங்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இவ்வாறு செய்தால் மக்களின் வேலை வாய்ப்பு பாதிக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று முன்தினம் முதல் போராட்டத்தையும் தொடங்கி உள்ளார்கள். தமிழ்நாட்டில் மத்திய அரசின் 7-வது சம்பள கமி‌ஷன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் செலவு தொகை அதிகரித்து இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசில் மொத்த செலவினங்களில் ரூ.72 ஆயிரம் கோடி சமூகநல திட்டங்களுக்காக வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இந்த திட்டங்களுக்கு அதிக அளவில் செலவிடப்படுகிறது. அதேபோல இலவச திட்டங்களுக்கும் அதிக அளவில் செலவு செய்யப்படுகிறது. இதன் காரணமாக பல்வேறு அடிப்படை திட்டங்களை நிறைவேற்றுவதற்கு போதிய பணம் இல்லாத நிலை உள்ளது. அதே நேரத்தில் இலவச திட்டங்கள் ஏழை-பணக்காரர்கள் இடைவெளியை குறைப்பதற்காக வழங்கப்படுவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் அரசு தரப்பில் கூறும்போது மற்ற மாநிலங்களை போல அல்லாமல், சுகாதாரம் மற்றும் கல்வி போன்றவற்றுக்கு தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் நிதி செலவிடப்படுகிறது. இதன் காரணமாக அரசு செலவு செய்யும் பணம் அதிகமாக உள்ளது என்று கூறினார்கள்.

Leave a comment