வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்தது – சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்

442 0

வீராணம் ஏரியில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர இந்த ஏரியில் இருந்து தினமும் சென்னை மக்களின் தேவைக்காக குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வரத்தொடங்கியது. கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவமழையாலும் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக ஏரியின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து, முழுகொள்ளளவை எட்டியது. உபரிநீர் வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டு, வீணாக கடலில் கலந்தது.

இந்த நிலையில் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 மாதமாக மழை இல்லை. ஏரிக்கு நீர் வரத்தும் இல்லை. வெயில் சுட்டெரிப்பதால் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்றைய நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 39.30 அடியாகும். சென்னைக்கு வினாடிக்கு 71 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

ஏரியில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வீராணம் ஏரி பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது வீராணம் ஏரியின் நீர்மட்டம் 39.30 அடியாக உள்ளது. ஏரியில் நீர்மட்டம் 39 அடி வரும் வரையில் சென்னைக்கு குடிநீர் அனுப்பலாம்.

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 71 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கிறோம். இதேபோன்று தொடர்ந்து 2 நாட்கள் மட்டுமே சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியும். நீர்மட்டம் 39 அடியாக குறைந்ததும், சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்படும் என்றார்.

Leave a comment