குரங்கணி காட்டுத் தீ – காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய ஆளுநர்

208 0

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி பலத்த தீக்காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆறுதல் கூறினார். 

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 36 பேர் காட்டுத் தீயில் சிக்கினர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டது.

உயிருக்கு போராடிய 27 பேர் மீட்கப்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. 14 பேர் மதுரை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சென்னை வேளச்சேரியைச்சேர்ந்த நிஷா (வயது20) நேற்று மாலை உயிரிழந்தார். இதனால் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ ஏர்ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் மதுரை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 12 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களின் உடல்நிலையை 24 மணி நேரமும் டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மதுரை சென்றார். அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவோரை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அதன்பின்னர், அவர்களின் உறவினர்களுக்கு ஆளுநர் ஆறுதல் கூறினார். அமைச்சர் அன்பழகன் மற்றும் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் ஆகியோர் உடன் சென்றனர்.

Leave a comment