பேரறிவாளனின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ பதில்

329 0

ராஜீவ் காந்தி கொலையில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை திரும்பப் பெற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை திரும்பப்பெற வேண்டும் என சி.பி.ஐ பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், இந்த வழக்கில் சி.பி.ஐ அதிகாரி தவறான தகவல் அளித்ததன் மூலம் தனக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால், தனக்கு வழங்கிய தண்டனைத் தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை கடந்த ஜனவரி மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம் மூன்று வாரங்களுக்குள் இதுதொடர்பாக சி.பி.ஐ பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை பிப். 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில், சி.பி.ஐ சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
மனுதாரர் பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை திரும்பப் பெறக் கோரியும், வழக்கு விசாரணையை மீண்டும் நடத்தக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராரிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக பேரறிவாளன) தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் 1999, அக்டோபர் 10-ஆம் தேதி தள்ளுபடி செய்துள்ளது.
19 ஆண்டுகளுக்கு முன் அளிக்கப்பட்ட தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட் தலையிடக்கூடாது. அரசியல் அமைப்புச் சட்டம் 137-ஆவது பிரிவின் படி, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகள், உத்தரவுகள் நாடாளுமன்றம் உருவாக்கும் சட்ட விதிகளுக்கு உள்பட்டதாகும்.
145-ஆவது பிரிவின்படி, எந்தவொரு தீர்ப்பளிக்கப்பட்ட உத்தரவையும் மறு ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது.
இதன்படி, தண்டனை தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனுதாரருக்கு இருந்த பரிகார வாய்ப்பை பயன்படுத்தியாகிவிட்டது. மேல்முறையீடு, மறு ஆய்வு மனுக்கள் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, தமிழக கவர்னரிடமும், ஜனாதிபதியிடமும் சார்பில் அளிக்கப்பட்ட கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. கருணை மனுக்கள் மீது ஜனாதிபதி மிகவும் தாமதமாக முடிவெடுத்ததாகக் கூறி, அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக சுப்ரீம் கோர்ட் குறைத்தது.
கருணை மனுக்கள் மீது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவுகளால் தண்டனை குறைக்கப்பட்டதே தவிர, விசாரணையின் குறைகள் பேரில் தண்டனை குறைக்கப்படவில்லை. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மனுதாரரின் பங்கு குறித்து தண்டனை தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் தொடர்பில்லை, அப்பாவி என மனுதாரர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்நிலையில் விசாரணை அதிகாரி வி. தியாகராஜன் மனுதாரரின் வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்துள்ளதாக தெரிவித்து, எவ்வித அடிப்படையும் இன்றி தாக்கல் செய்த மனு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.
எனவே, 1998, மே 11-ஆம் தேதி விதிக்கப்பட்ட தண்டனை தீர்ப்பை திரும்பப் பெறக் கோரும் மனுதாரரின் கோரிக்கையை நீதிசார் நலன் கருதி சுப்ரீம் கோர்ட் நிராகரிக்க வேண்டும். மனுதாரருக்கு பெரிய அளவுக்கு அபராதம் விதிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment