காவிரி படுகை பகுதியை பாலைவனம் ஆக்குவதா? – வைகோ, அன்புமணி கண்டனம்

237 0

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் செயல்படுத்த முயல்வது அப்பகுதிகளை பாலைவனமாக மாற்றுவதற்கான முயற்சி என வைகோ, அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காவிரி டெல்டா பகுதிகளில் புதிய எண்ணெய் வளப்பகுதிகளை அடையாளமிட்டு, அங்கு ஆய்வு மற்றும் துரப்பணப் பணிகளை மேற்கொள்வதற்கான சர்வதேச ஏல முறைக்கு ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் மூலம் 2018 ஜனவரி 19-ந் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்த ஏலத்தில் பங்கேற்க நூறு விழுக்காடு அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு பெருநிறுவனங்கள் ஏப்ரல் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும், தேர்வு செய்யப்படும் நிறுவனங்கள் 2018 ஜூன் மாதம் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் எரிவாயு உற்பத்திப் பணிகளைத் தொடங்க அனுமதி வழங்கப்படும் என்றும் அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஏவலுக்குப் பணிந்து கிடக்கும் அதிமுக அரசு, மோடி அரசின் வஞ்சகத் திட்டங்களைச் செயல்படுத்தத் துணைபோய்க்கெண்டு இருப்பதை தமிழக மக்கள் கண் கூடாகப் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயனங்கள் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் அமைக்க மத்திய அரசு, நிலங்களைக் கையகப்படுத்திட உத்தரவிட்டுள்ளது. இதனை ஏற்று கடந்த 2017, ஜூலை 19-ல் தமிழக அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, கடலூர், நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57,500 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும் என்றும், 318 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காவிரி படுகையில் 667 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் படர்ந்துள்ள நிலக்கரிப்படி மங்களில் இருந்து மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுமானால் வேளாண் விளை நிலங்கள் முற்றாக அழிந்து, வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோய்விடும்.

காவிரி பாசனப்பகுதி மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் கோரி வரும் நிலையில், நாசகாரத் திட்டங்களைத் திணித்து, காவிரி டெல்டாவை பாலைவனம் ஆக்க முயற்சிக்கும் மோடி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில், மத்திய பா.ஜ.க. அரசின் நயவஞ்சகத் திட்டங்களுக்கு எதிராக மக்கள் திரள் போராட்டங்கள் எரிமலையென வெடிக்கும் என்று எச்சரிக்கிறேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார். பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படவுள்ள 65 ஹைட்ரோ கார்பன் திட்டங்களில் 24 திட்டங்களை காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் செயல்படுத்த முயல்வது அப்பகுதிகளை பாலைவனமாக மாற்றும் சதி என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இதை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக அனுமதிக்கமாட்டார்கள்.

இயற்கை வளம் மிகுந்த காவிரி பாசனப் பகுதிகளை எண்ணெய்க் கிணறுகளாக மாற்றும் சதியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. காவிரிப் பாசன மாவட்டங்களில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிகூட பெறாமல் மொத்தம் 189 எண்ணெய்க்கிணறுகளை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது.

அடுத்தக்கட்டமாக நாகை மாவட்டம் நரிமணத்தில் செயல்பட்டு வரும் 10 லட்சம் டன் திறன் கொண்ட சுத்திகரிப்பு ஆலையை ஆண்டுக்கு ஒரு கோடி டன் திறன் கொண்ட ஆலையாக விரிவாக்கம் செய்ய தீர்மானித்திருக்கிறது. இதற்காக 600 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி தரும்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. நரிமணம் ஆலை விரிவாக்கப்பட்டால் அதற்கு எண்ணெய் வழங்குவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணெய்க் கிணறுகளை அமைக்கவேண்டியிருக்கும். இதனால் காவிரி பாசனப் பகுதியின் வளம் சீரழிக்கப்படும்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் காவிரிப்பாசன மாவட்டங்கள் நமது கண் முன்பே அழிவதை அனுமதிக்க முடியாது. காவிரிப் பாசன மாவட்டங்களை எண்ணெய் வள மண்டலமாக மாற்றவேண்டும் என்பதற்காகவே காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் செய்வதாக விவசாயிகள் எழுப்பும் குற்றச்சாட்டுகளை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

எனவே, காவிரிப் பாசன பகுதிகளில் இதுவரை செயல்படுத்தப்படும் திட்டங்கள், புதிதாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து ஹைட்ரோ கார்பன் மற்றும் பெட்ரோ கெமிக்கல் திட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, காவிரிப் பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, வேளாண்மை செழிப்பதற்குத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a comment