இந்த நாட்டின் ஜனாதிபதியாகுவதற்கு அமெரிக்க குடியுரிமையையும் தூக்கி எறியத் தயார்!! கோத்தபாய அதிரடி அறிவிப்பு

500 0

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க வேண்டிய நிலை ஏற்படுமாயின் அமெரிக்க குடியுரிமையினை இரத்து செய்து கொள்வேன் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு விஷேட நேர்காணல் ஒன்றினை வழங்கிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின்மீது உண்மையான பற்றும் அன்பும் உள்ள ஒருவரும், யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த ஒருவரும், இராணுவத்தினரை பாதுகாக்கும் ஒருவரும், நாட்டில் கலாச்சாரத்தை பாதுகாக்கும் ஒருவரும், சுயநலமற்ற தூய்மையான அரசியலில் ஈடுபடும் ஒருவருமே ஜனாதிபதி வேட்பாளராக நிற்க தகுதியுடையவர் எனவும் கோட்டா இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து “தாங்கள் குறிப்பிட்ட அனைத்தும் தகுதிகளும் உங்களிடம் இருப்பதாகவும், நீங்களே ஜனாதிபதியாக வர வேண்டும் எனவும் சிலர் கருத்து வெளியிடுகின்றார்களே…? ” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த கோட்டா “சிலர் அவ்வாறு கூறுகின்றார்கள் ஆயினும் காலம் அதனை தீர்மானிக்கும். அவ்வாறு ஜனாதிபதி வேட்பாளராக நான் களமிறங்க வேண்டுமாயின் நிச்சயமாக களமிறங்குவேன்” எனக் கூறியுள்ளார்.அதற்காக அமெரிக்க குடியுரிமை தடையாக இருக்கும் பட்சத்தில் அதனையும் தூக்கி எறிய வேண்டிய நிலையும் ஏற்படும் எனவும் கோட்டா தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, சிங்கள இனத்தவரின் வாக்குகள் மாத்திரம் இல்லாமல் தமிழ் – முஸ்லிம் என்ற சிறுபான்மை இனத்தவர் அனைவரதும் வாக்குகள் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு எனவும் கோட்டாபய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment