ஆயுள் வேத நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி : எண்மர் கைது

236 0

ஆயுள் வேத நிலையம் என்ற போர்வையில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று வெலிகடை பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு எண்மர் அடங்கிய குழுவொன்று வெலிகடை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வெலிகட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நரஹேன்பிட்ட நாவல பிரதேசத்தில் ஆயுள் வேதநிலையம் என்ற போர்வையில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட விபசார விடுதியொன்று இன்று சுற்றிவளைக்கப்பட்டு எண்மர் அடங்கிய குழுவொன்று கைதுசெய்யப்பட்டுள்ளது.

அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட பிடியாணையின் அடிப்படையில் வெலிகடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் ஆலோசனையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த ஆயுள்வேத நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

பல நாட்களாக மறைமுகமாக நடத்திச் செல்லப்பட்டு வந்த இந்த விபசார விடுதி தொடர்பில் கிடைக்கப்பெற்ற விசேட தகவலின் அடிப்படையிலேய வெலிகட பொலிஸாரினால் அளுத்கடை நீதிமன்றத்தில் பிடியாணைக்கான மனு முன்வைக்கப்பட்டு வந்தது.

அண்மையிலும் இவ்வாறு பல சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த சுற்றிவளைப்பின் போது இவ்விபசார விடுதியை முன்னெடுத்துச் சென்ற முகாமையாளர் ஆணொருவர் உட்பட விபசாரத்திற்காக தயாராகவிருந்த ஏழு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் எழுவரும் 23, 30, 33, 38, 39 மற்றும் 40 வயதுடைய தம்புள்ளை, வெல்லம்பிட்டிய, சீதுவ, மாதவல், வகாடுவகொட மற்றும் வகாடவல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்களை ஆயுள்வேத நிலையத்தில் வேலைப் பெற்றுத் தருவதாக கூறியும் அவர்களுக்கு அதிக சம்பளம் பெற்றுத் தருவதாக ஏமாற்றி அழைத்து வந்து இவ்வாறான தொழிலில் பாரிய வலைத்தளம் ஒன்று செயற்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இவர்கள் எண்மரையும் இன்று அளுத்கடை 4 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்போது அளுத்கடை நீதவான் நீதிமன்ற நீதிபதி இவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகடை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a comment