15 அரசு துறைகளின் கீழ் வரும் 18 ஆயிரம் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிப்பு

214 0

15 அரசு துறைகளின் கீழ் வரும் 18,775 கூட்டுறவு சங்கங்களுக்கு நான்கு கட்டமாக தேர்தல் நடக்கும் என கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களுக்கான நிர்வாகக்குழு உறுப்பினர்களின் தேர்தல் நடந்தது. அவர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:-
கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் கடந்த 2013-ம் ஆண்டு நடந்தது. தேர்வு செய்யப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களின் 5 ஆண்டு பதவிக்காலம் ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ளது. புதிதாக நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக, நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்களை கூட்டுறவுத் தேர்தல் ஆணையம் நடத்தவுள்ளது.
கூட்டுறவுத்துறை, பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை, மீன் வளத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, கூட்டுறவு வீட்டுவசதித் துறை, பனைப்பொருள் வளர்ச்சி வாரியம், கதர் கிராம தொழில் வாரியம், தொழில் மற்றும் தொழில் வணிகத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை, வேளாண்மைத்துறை, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சி பஞ்சாயத்துராஜ் துறை, பட்டு வளர்ச்சித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, சர்க்கரைத்துறை  ஆகிய 15 அரசு துறைகளின் கட்டுப்பாட்டின்கீழ் வரும் 18,775 சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்களை கூட்டுறவு தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது.
தொடக்க சங்கங்கள், மத்திய சங்கங்கள், மாநில சங்கங்கள் என்ற மூன்றடுக்கு முறையில் கூட்டுறவுச் சங்கங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவதால் அவற்றிற்கான தேர்தல்களை ஐந்து கட்டங்களாக நடத்த கூட்டுறவு தேர்தல் ஆணையம்  திட்டமிட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையில் உள்ள 18,435 தொடக்க கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்களை முதற்கட்டத்தில் நான்கு நிலைகளில் நடத்தப்பட உள்ளது. அதற்கான தேர்தல் திட்டத்தை மாநில தேர்தல் ஆணையம் தொடர்புடைய சங்கங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட தேர்தல் அலுவலர்களால் முதல் நிலைக்கான தேர்தல் அறிவிப்பு மார்ச் 12ந்தேதி வெளியிடப்படும்.
அரசு துறைகளின் தலைவர்கள் மாநில தேர்தல் அலுவலர்களாகவும், அத்துறைகளின் மாவட்ட அளவிலான அதிகாரிகள் மாவட்ட தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர், சென்னை மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர்கள் மாவட்ட தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கூட்டுறவுச் சங்க தேர்தல்களை நியாயமாகவும், சுதந்திரமாகவும், சட்டபூர்வமாகவும் நடத்திட மாவட்ட நிர்வாகம் தேவையான ஒத்துழைப்பை தந்திட மாவட்ட ஆட்சித் தலைவர்களையும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களையும் கூட்டுறவுத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment