தனுஷ்கோடியில் பாகிஸ்தான் வாலிபர் கைது- உளவாளியா? என கியூ பிரிவு போலீசார் விசாரணை

238 0

ராமேசுவரம் அடுத்த தனுஷ்கோடியில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் வாலிபர் உளவாளியா என்பது குறித்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேசுவரத்தை அடுத்துள்ள தனுஷ் கோடி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக ஒரு வாலிபர் சுற்றித்திரிவதாக ராமேசுவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்று காலை அங்கு சென்ற சவுக்கு தோப்பு பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்தி மற்றும் உருது மொழியில் பேசிய அந்த வாலிபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை ராமேசுவரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த வாலிபர் பாகிஸ்தானில் உள்ள சினோகூர் பகுதியை சேர்ந்த சுப்ரத் என தெரியவந்தது. இவர் கடந்த 10 நாட்களாக தனுஷ்கோடியில் முகாமிட்டு உள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த கியூ பிரிவு போலீசார் விரைந்து வந்து சுப்ரத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சதி செயல்களுக்கு திட்டமிட சுப்ரத் தனுஷ்கோடிக்கு வந்தாரா? அல்லது உளவு பார்க்க பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யால் அனுப்பி வைக்கப்பட்டவாரா? என கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுப்ரத் முறையாக இந்தியாவுக்கு வந்தாரா? அல்லது இலங்கையில் இருந்து கள்ளப்படகு மூலம் தனுஷ் கோடி வந்தாரா எனவும் விசாரணை நடந்து வருகிறது.

தனுஷ்கோடியில் இருந்து சில கிலோ மீட்டர் கடல் தொலையில் சர்வதேச எல்லை உள்ளது. இலங்கையில் இருந்து எந்தவித ஆவணமும் இல்லாமல் பலர் கள்ளதோணி வழியாக தனுஷ்கோடிக்கு வருவ துண்டு. மேலும் ராமநாதபுரம், ராமேசுவரம், தனுஷ் கோடி கடல் பகுதியில் கடத்தல் சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதனால் இந்தியாவுக்குள் எந்த வித ஆவணமும் இன்றி எளிதாக வர வாய்ப்பு உள்ளது. கடலோர காவல் படையினர் பாதுகாப்பு பணியில் மெத்தனமாக இருப்பதால் இன்னும் ஊடுருவல் சம்பவங்கள் நடந்து வருவதாக ராமேசுவரம் மக்கள் குற்றம் சாட்டினர்.

Leave a comment